Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாடு : அமைச்சருக்கு ஒரு நீதி, மக்களுக்கு ஒரு நீதியா?

நடமாட்டக் கட்டுப்பாடு : அமைச்சருக்கு ஒரு நீதி, மக்களுக்கு ஒரு நீதியா?

730
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சமூக ஊடகங்களும், இணைய வாசிகளும் கடந்த இரண்டு நாட்களாகப் பொங்கியெழுந்து அமைச்சர் ஒருவரைக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

பாஸ் கட்சியைச் சேர்ந்த தோட்டத் தொழில் மூலப் பொருள் அமைச்சர் கைருடின் அமான் ரசாலிதான் அவர்!

அண்மையில் துருக்கிக்கு சென்ற அவர் நாட்டுக்குத் திரும்பி வந்தபோது அமுலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின்படி 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதைப் பின்பற்றாமல் இல்லம் சென்ற அவர் அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

இந்தத் தகவலை ஜசெகவின் செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோ நாடாளுமன்றத்தில் எழுப்பியதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சமூக ஊடகத்தினரும், இணைய வாசிகளும் அமைச்சரைக் “கிழி கிழி” எனக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

அமைச்சருக்கு ஒரு நீதி, பொதுமக்களுக்கு ஒரு நீதியா? என்ற கேள்வி எங்கெங்கும் எழுப்பப்படுகின்றன.

இதே நிலை பொதுமக்களில் ஒருவர் எதிர்நோக்கியிருந்தால் அவருக்கு கட்டாயம் 14 நாட்கள் நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும். அதனை அவர் மீறியிருந்தால் கண்டிப்பாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருப்பார்.

ஆனால் அமைச்சர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காவல்துறையில் புகார் செய்யப்பட்டது

இதைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 19) அமைச்சர் கைருடின் மீது காவல் துறையில் புகார் ஒன்று செய்யப்பட்டிருக்கிறது.

செபுத்தே தொகுதியின் ஜசெக இளைஞர் பகுதியினர் இந்தப் புகாரைச் செய்துள்ளனர்.

1988-ஆம் ஆண்டுக்கான தொற்று நோய்க்கான தடை மற்றும் கட்டுப்பாடு சட்டத்தின் அடிப்படையில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை அமைச்சர் மீறியிருக்கிறார் என அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை பிற்பகலில் ஸ்ரீ பெட்டாலிங் காவல் நிலையத்தில் இந்தப் புகார் செய்யப்பட்டது.

அரசாங்கம் இதுபோன்ற விவகாரங்களில் இரட்டைப் போக்கைக் கொண்டிருக்கிறது என்றும் ஜசெக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

ஜூலை 3 முதல் 7-ஆம் தேதி வரை கைருடின் துருக்கிக்கு வருகை மேற்கொண்டார். அந்தக் காலகட்டத்தில் 5,600 புதிய கொவிட்-19 சம்பவங்களும் இதன் தொடர்பிலான 93 மரணங்களும் துருக்கியில் நிகழ்ந்தன. பாதிப்புகள் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரையில் துருக்கியில் 250,000 கொவிட்-19 பாதிப்புகளும் 6,061 மரணங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

“சிவகங்கா” தொற்று பரப்பிய நெசார் முகமட் சாபுர் பாட்சாவுக்கு 12,000 ரிங்கிட் அபராதமும், 5 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அமைச்சர் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றும் பொதுமக்கள் மத்தியில் கடுமையான குறைகூறல்கள் எழுந்திருக்கின்றன.