Home One Line P2 “இதைப் பார்ப்பதற்கு என் தாயார் இல்லையே” கமலா ஹாரிஸ் உருக்கம்

“இதைப் பார்ப்பதற்கு என் தாயார் இல்லையே” கமலா ஹாரிஸ் உருக்கம்

820
0
SHARE
Ad

வில்மிங்டன் (டிலாவேர், அமெரிக்கா) – “இன்று நான் அமெரிக்க துணையதிபர் வேட்பாளராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவதைக் காண என் தாயார் அருகில் இல்லையே” என கமலா ஹாரிஸ் தனது உரையில் வெளியிட்ட உருக்கமான வார்த்தைகள் அனைத்துலக அளவில் பேசப்பட்டு வருகிறது.

“என் தாயார் இன்று இங்கே இல்லை என்றாலும், எங்கோ மேலிருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். வாழ்த்துகள் தெரிவிக்கிறார்” என கமலா ஹாரிஸ் மேலே பார்த்தபடி கண்கலங்கியபடி கூறியது அனைவரின் நெஞ்சத்தையும் தொட்டது.

அமெரிக்காவின் டிலாவேர் மாநிலத்தில் உள்ள வில்மிங்டன் நகரில் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. கொவிட்-19 பாதிப்புகளால் மெய்நிகர் இயங்கலை வழியாக நடத்தப்படும் இந்த மாநாட்டை கோடிக்கணக்கானோர் அமெரிக்காவிலிருந்தும், உலகம் முழுவதிலும் இருந்தும் பார்த்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

அமெரிக்க நேரப்படி நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 19 – மலேசிய நேரப்படி இன்று வியாழக்கிழமை காலை)  மாநாட்டு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக துணையதிபர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டதை ஏற்றுக் கொண்டு ஏற்புரை நிகழ்த்தினார் கமலா ஹாரிஸ்.

கமலாவின் தாயார் சியாமளா – தந்தை டொனால்ட் ஹாரிஸ்

தனது உரையின் முக்கியப் பகுதியாக தனது தாயார் சியாமளா கோபாலன் ஹாரிஸ் குறித்து புகழாரம் சூட்டினார் கமலா ஹாரிஸ்.

19-வது வயதில் உயர்கல்வி பெறுவதற்காக தனது தாயார் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்ததையும் அங்கு தனது தந்தையார் டொனால்ட் ஹாரிசைச் சந்தித்து அமெரிக்க மரபுப்படி காதல்வயப்பட்டதையும் கமலா நினைவு கூர்ந்தார். 1960-ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவையே உலுக்கிக் கொண்டிருந்த மனித உரிமைகளுக்கான போராட்டக் களத்தில் தனது பெற்றோர்கள் இணைந்தனர் என்றும் கமலா ஹாரிஸ் கூறினார்.

தனது இளம் வயதிலேயே தனது தாயார் விவாகரத்து பெற்றாலும் தன்னையும் தனது தங்கையையும் பல்வேறு பிரச்சனைகளுக்கிடையில் வளர்த்ததையும் நெகிழ்ச்சியுடன் தனது உரையில் நினைவுபடுத்தினார் கமலா.

“தனது 25-வது வயதில் அவர் என்னை கலிபோர்னியா மாநிலத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் பெற்றெடுத்தபோது, ஒருகாலத்தில் நான் இந்த மேடையில் நிற்பேன். ஜனநாயகக் கட்சியின் துணையதிபர் வேட்பாளராக முன்மொழியப்படுவேன் என்றெல்லாம் அவர் கனவு கூட கண்டிருக்க மாட்டார். அதன் காரணமாக இன்று நான் அமெரிக்க துணையதிபர் வேட்பாளராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவதைக் காண என் தாயார் அருகில் இல்லையே என வருத்தப்படுகிறேன். என் தாயார் இன்று இங்கே இல்லை என்றாலும், எங்கோ மேலிருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். வாழ்த்துகள் தெரிவிக்கிறார்” என கமலா ஹாரிஸ் மேலே பார்த்தபடி கண்கலங்கியபடி கூறினார்.

கணவர் டக்ளஸ் – குழந்தைகளுடன்…

“எனது தாயார் எப்போதும் குடும்பத்திற்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். எனவே, எனக்கு எனது குடும்பம் முக்கியம். எனது தங்கை முக்கியம். எனது உறவினர்கள் முக்கியம். எனது கணவர் அவரது இரண்டு பிள்ளைகள் என அனைவரும் எனக்கு முக்கியம். அவர்களுக்கு நான் முக்கியத்துவம் அளிக்கிறேன். அடுத்ததாக, சமூகப் போராட்டங்களில் ஈடுபட வேண்டும், மக்களுக்காகப் பாடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவரது வழிகாட்டுதல்கள் வார்த்தைகள்தான் என்னை அடுத்தடுத்து உயரச் செய்து இன்று இந்த இடத்திற்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது” என்றும் கமலா தனது தாயாருக்குப் புகழாரம் சூட்டினார்.

“எனது தாயார் என்னை எனது ஆப்பிரிக்கப் பாரம்பரியப்படியும், இந்தியப் பாரம்பரியப்படியும் வளர்த்தார்” என்றும் தெரிவித்த கமலா ஹாரிஸ் தனது துணையதிபர் வேட்பாளருக்கான நியமனத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வதாகவும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அவரது உரைக்குப் பின்னர் அவரது கணவர் டக்ளஸ் எம்ஹோப் அவருடன் மேடையில் இணைந்து கொண்டார். அதிபர் வேட்பாளர் ஜோ பைடனும் மேடையில் தோன்றி கமலாவுக்கு வாழ்த்து கூறினார்.

இன்று வியாழக்கிழமை ஜோ பைடன் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஏற்புரை நிகழ்த்துவார். அத்துடன் ஜனநாயகக் கட்சியின் மாநாடு முடிவடைந்து பிரச்சாரங்கள் தீவிரமாக முடுக்கிவிடப்படும்.

உணர்ச்சிகரமாகவும், உருக்கமாகவும், கேட்பவர்களின் நெஞ்சத்தைத் தொடும் விதமாகவும் கமலாவின் உரை அமைந்திருந்ததோடு, அமெரிக்காவில் குடியேறிய சாதாரண மக்களும், அவர்களின் வம்சாவளியினரும் அமெரிக்காவில் உச்ச நிலையை அடைய முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் அவரது உரை அமைந்திருந்தது என்பதால் இதன் மூலம் தேர்தலில் ஜோ பைடன்-கமலா கூட்டணியின் செல்வாக்கும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-இரா.முத்தரசன்