Home One Line P1 “தோக்கோ மால் ஹிஜ்ரா” விருது – நூர் ஹிஷாம் பெறுகிறார்

“தோக்கோ மால் ஹிஜ்ரா” விருது – நூர் ஹிஷாம் பெறுகிறார்

597
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று கொண்டாடப்படும் மால் ஹிஜ்ரா எனப்படும் இஸ்லாமியப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு வழங்கப்படும் “தோக்கோ மால் ஹிஜ்ரா” விருது சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாமுக்கு வழங்கப்படுகிறது.

இந்த விருது ஆண்டுதோறும் சிறந்த மலேசிய முஸ்லீம் சேவையாளர் ஒருவருக்கு வழங்கப்படும் விருதாகும்.

கடந்த திங்கட்கிழமை தனது பிறந்த நாளை முன்னிட்டு மாமன்னர் நூர் ஹிஷாமுக்கு டான்ஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தார். அதைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களிலேயே இந்த உயரிய விருதை நூர் ஹிஷாம் பெறுகிறார்.

#TamilSchoolmychoice

நூர் ஹிஷாமுக்கு “தோக்கோ மால் ஹிஜ்ரா” விருது வழங்கப்படும் அறிவிப்பை நேற்று புதன்கிழமை பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி முகமட் அல்-பாக்ரி அறிவித்தார்.

“அனைத்துலக தோக்கோ மால் ஹிஜ்ரா” விருது இந்த முறை 74 வயதான ஷேக் பேராசிரியர் டாக்டர் அகமட் தாயிப் என்பவருக்கு வழங்கப்படுகிறது. இவர் எகிப்தின் அல்-அசார் மசூதியின் தலைமை இமாம் ஆவார்.

நேற்று நடைபெற்ற விருதளிப்பு நிகழ்ச்சியில் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா இந்த விருதுகளை வழங்கினார். அந்த நிகழ்ச்சியின்போது மாமன்னரின் துணைவியார் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியாவும் உடனிருந்தார்.

பிரதமர் மொகிதின் யாசினும் இந்த விருதளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

விருது பெறும் இருவரும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அவர்கள் புரிந்த சாதனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இஸ்லாமிய உலகுக்கு அவர்கள் வழங்கிய பங்களிப்புக்காகவும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

நூர் ஹிஷாம் சுகாதார தலைமை இயக்குநராக நீண்ட காலமாக சிறந்த சேவைகளை வழங்கியிருக்கிறார். கொவிட்-19 பாதிப்புகள் தொடங்கிய காலத்திலிருந்து மலேசியாவின் முகமாக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஒளிர்ந்தவர் நூர் ஹிஷாம்.

நேரம், காலம் பார்க்காமல், தினமும் கொவிட்-19 குறித்த அறிக்கைகளை வழங்குவதிலும், தனக்கே உரிய ஆளுமையோடு பிரச்சனைகளைக் கையாண்டதிலும், அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் நூர் ஹிஷாம்.

அனைத்துலக அளவிலும் பல நாடுகளின் – அனைத்துலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல சுகாதார அமைப்புகளின் – பாராட்டுதல்களை நூர் ஹிஷாம் பெற்றிருக்கிறார்.

57 வயதான நூர் ஹிஷாம் சிப்பாங் (சிலாங்கூர்) வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தவராவார்.