Home கலை உலகம் விஸ்வரூபம் தமிழ்நாட்டில் 8ஆம் தேதி வெளியீடு – 7 காட்சிகள் நீக்கத்துடன்!

விஸ்வரூபம் தமிழ்நாட்டில் 8ஆம் தேதி வெளியீடு – 7 காட்சிகள் நீக்கத்துடன்!

951
0
SHARE
Ad

Kamal-Vishwaroopam-sliderசென்னை, பிப். 3- கமலஹாசன்  நடித்து தயாரித்து இயக்கிய `விஸ்வரூபம்’ படம் கடந்த 25-ந்தேதி தமிழ் நாடு முழுவதும் 524 தியேட்டர்களில் வெளியாவதாக இருந்தது. இந்தப்  படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு  தெரிவித்து, போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டதால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கருதி தமிழக அரசு 15 நாட்களுக்கு தடை விதித்தது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களும் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர்.

இதை எதிர்த்து கமலஹாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு தனி நீதிபதி வெங்கட்ராமன் தடையை நீக்கிய நிலையில் தமிழக அரசு அப்பீல் செய்தது. அப்பீல் மனுவை விசாரித்த தற்காலிக  தலைமை நீதிபதி தர்மாராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் கொண்ட பெஞ்ச் மீண்டும் தடை விதித்தது. வழக்கு விசாரணை 4-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இதன் காரணமாக விஸ்வரூபம் படம் தமிழ்நாட்டில் திரையிடப்படவில்லை. அதே சமயம் தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டது. விஸ்வரூபம் படம் தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளும் கமலஹாசனும் பேச்சு நடத்தி உடன்பாடு கண்டால் படத்தை வெளியிட அரசு உறுதுணையாக இருக்கும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இதை ஏற்று முஸ்லிம் அமைப்பினருடன் நேற்று கமலஹாசன் பேச்சு நடத்தினார். சென்னை கோட்டையில் நடந்த பேச்சு வார்த்தையில் அரசு தரப்பில் உள்துறை செயலாளர் ராஜகோபால், கமலஹாசன், அவரது அண்ணன் சந்திரஹாசன், 24 முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பின்  ஒருங்கிணைப்பாளர் முகமது அனீபா, த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

4 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. 7 காட்சிகளை நீக்கவும், குறிப்பிட்ட சில வசனங்களை நீக்கவும், படத்தின் ஆரம்பத்தில் இது கற்பனை கதை யாரையும்  புண்படுத்தும் நோக்கம் அல்ல என்று எழுத்து போடவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. எழுத்து பூர்வமான உடன்பாட்டில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.

உடன்பாடு ஏற்பட்ட விவரங்களை கூட்டத்துக் குப்பின் முகமது அனீபாவும், கமலஹாசனும் தனித் தனியே நிருபர்களிடம் வெளியிட்டனர். ஜவாஹிருல்லா, அனீபா கூறுகையில், “தங்கள் கோரிக்கையை ஏற்று ஆட்சேபகரமான  காட்சிகளை நீக்க கமலஹாசன் ஒப்புக் கொண்டதால் நாங்கள் தொடர்ந்த வழக்குகளையும், போராட்டங்களையும் வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.

ஜெயலலிதாவுக்கு கமல் நன்றி

உடன்பாடு காண ஏற்பாடு செய்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிய கமலஹாசன்,  “படத்தின் காட்சிகளை நீக்கிய பின்பு மீண்டும் சென்சார் போர்டில் காட்டி  படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்பதாக” தெரிவித்தார்.

இதையடுத்து நாளை கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரும்போது அரசின் தடை உத்தரவை எதிர்த்து  கமலஹாசன் தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்படுகிறது. இதே போல் முஸ்லிம் அமைப்பினரும் தங்கள் வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொள்கிறார்கள்.

அரசு தரப்பும் தனது நிலையை நாளை கோர்ட்டில் தெரிவிக்கும். அப்போது விஸ்வரூபம் படத்துக்கு எதிரான அரசின் தடை உத்தரவை விலக்கிக் கொள்ளும் அறிவிப்பு வெளியாகும்.

பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி  ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கும் பணியை கமலஹாசன் உடனடியாக தொடங்கினார். சென்னையில் உள்ள எடிட்டிங் தியேட்டரில் இந்தப்பணி நடைபெற்று வருகிறது.

நவீன ஒலி அமைப்புடன் கூடிய தொழில்நுட்பத்துடன் படம் எடுக்கப்பட்டதால் அதற்கான தொழில்நுட்ப கலைஞர்கள் உதவியுடன் காட்சிகளும், வசனங்களும் நீக்கப்படுகின்றன. சில இடங்களில் திருக்குர்ரான் வசனங்கள், ஆட்சேபகரமான வசனங்கள் நீக்கப்படுவதால் அந்த இடத்தில் வசனம் இல்லாமல் காட்சிகள் மட்டும் ஓடும்.

இந்தப்பணிகள் முடிவடைய ஓரிரு நாட்கள் ஆகும். அதன் பிறகு மீண்டும் கமலஹாசன் சென்சார் போர்ட்டில் அனுமதி  பெற்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார். விஸ்வரூபம்  படம் தமிழ்நாடு முழுவதும் 524 தியேட்டர்களில் வெளியிட கமலஹாசன் திட்டமிட்டு இருந்தார். ஆனால் படம் திரையிடப்படாததால் அந்த தியேட்டர்களில் மணிரத்னத்தின் `கடல்’ படமும், விக்ரம் நடித்த `டேவிட்’  படமும் ரிலீஸ் செய்யப்பட்டது.

`விஸ்வரூபம்’ படம் பிரச்சினை முடியும் வரை மட்டுமே இந்த தியேட்டர்களில் கடல், டேவிட் படங்களை திரையிட வேண்டும், தடை நீங்கியதும் மீண்டும் விஸ்வரூபத்தை திரையிட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் பேரில் இந்த தியேட்டர்கள்  விட்டுக் கொடுக்கப்பட்டன. இதனால் கடல், டேவிட் படங்களுக்கு ஒரு வாரம் மட்டுமே (7-ந்தேதி வரை) முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே  8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விஸ்வரூபம் படத்தை தமிழ் நாடு முழுவதும் ரிலீஸ் செய்ய கமலஹாசன்  திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. நாளை கோர்ட்டில் வழக்கு முடிவுக்கு வந்ததும்  ரிலீஸ் தேதியை உடனே கமலஹாசன் அதிகாரப் பூர்வமாக அறிவிப்பார். தேதி அறிவிக்கப்பட்டதும் விஸ்வரூபம்  படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தியேட்டர்களில் நடைபெறும்.

விஸ்வரூபம் படத்துக்கு தமிழக ரசிகர்களிடையே அமோக வரவேற்பும் எதிர்பார்ப்பும் இருப்பதால் ஏற்கனவே ஒப்புக்  கொள்ளப்பட்ட 524  தியேட்டர்கள் தவிர சிறிய நகரங்களிலும் கூடுதலாக பல தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவும் முடிவு  செய்யப்பட்டுள்ளது.

தியேட்டர்களில் ரிலீஸ் ஆனதும் அடுத்த சில நாட்களில் டி.டி.எச். மூலம் தொலைக்காட்சிகளில் விஸ்வரூபம் படம் நேரடியாக வீடுகளில் ஒளிபரப்பப்படும். டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகும் தேதியையும் கமலஹாசன் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி அறிவிப்பார்.

நீக்கப்படும் காட்சிகள் விவரம்

விஸ்வரூபம் படம் தொடர்பான முத்தரப்பு பேச்சு வார்த்தையின்போது இஸ்லாமிய அமைப்பினர் 15 காட்சிகளையும், சில வசனங்களையும் நீக்க வேண்டும் என்று கூறினார்கள். உடனே கமலஹாசன் தனது லேப்டாப்பில் பதிவு செய்துள்ள அந்த காட்சிகளை போட்டுக் காட்டி விளக்கினார்.  அவைகளை வெட்டினால் கதையின் தொடர்ச்சி இல்லாமல் போய் விடும் என்றார். இதையடுத்து 7 காட்சிகளை நீக்கவும், மற்ற இடங்களில் வசனங்களை நீக்கவும் ஒப்புக் கொண்டார்.

* அதன்படி படத்தின் தொடக்கத்தில், “இது இஸ்லாமியர்களுக்கு எதிராகவோ மற்ற சாதி-மதத்தினரின் கோட்பாடுகளுக்கு எதிராகவோ எடுக்கப்பட்ட படம் அல்ல, இது ஒரு கற்பனை கதை என டைட்டில் போடப்படும்.

* படத்தில் ஆங்காங்கே காட்சிகளின் போது ஒலிக்கும் திருக்குர்ரான் வசனங்கள் நீக்கப்பட்டு வெறும் காட்சிகள் மட்டும் ஓடும்.

* திருக்குர்ரான் வசனம் பின்னணியில் அமெரிக்கரின் தலை  துண்டிக்கப்படும் காட்சிகளும், வசனமும் நீக்கப்படும்.

* அமெரிக்காவில் குண்டு வெடிப்பை தடுப்பதற்காக கமலஹாசன் பிரார்த்தனை செய்யும்  காட்சிகளும், பின்னணியில் தெரியும் தொழுகை நடத்தும் காட்சிகளும் நீக்கப்படும்.

* முல்லா ஒமர் கோவையிலும், மதுரையிலும் தலை மறைவாக இருந்தார் என்பதை சித்தரிக்கும் காட்சிகள் நீக்கப்படும்.

* நடிகர் நாசர் ஒரு காட்சியில், “முஸ்லிம் அல்லாதவர்களை  அப்புறப்படுத்துவதே முஸ்லிம்களின் கடமை” என்று வசனம் பேசுவார். அந்த காட்சிகள் நீக்கப்படும்.