Home அரசியல் தேசிய முன்னணியை உடைத்து மூன்றாவது அணியை உருவாக்க துங்கு ரசாலி முயற்சியா?

தேசிய முன்னணியை உடைத்து மூன்றாவது அணியை உருவாக்க துங்கு ரசாலி முயற்சியா?

606
0
SHARE
Ad

tengku-rasalighஜூன் 12 – அண்மையில் சபா, சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த தேசிய முன்னணியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினரும், அம்னோவின் மூத்த தலைவருமான துங்கு ரசாலியைச் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும், நடப்பு சூழ்நிலைகள் மாறுமா என்ற ஐயப்பாட்டையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

#TamilSchoolmychoice

காரணம், துங்கு ரசாலியுடனான இந்த சந்திப்பின்போது, மூன்றாவது அரசியல் அணி ஒன்றை உருவாக்குவது குறித்து பேசப்பட்டதாகவும், அந்த அணிக்குத் தலைமை தாங்கி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு துங்கு ரசாலி பிரதமராக தலைமையேற்க பேசப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

சபா, சரவாக்கைச் சேர்ந்த சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய முன்னணியிலிருந்து விலகினால், அவர்களோடு மேற்கு மலேசியாவில் உள்ள தேசிய முன்னணியைச் சேர்ந்த10 நாடாளுமன்ற உறுப்பினர்களை துங்கு ரசாலி தன் பக்கம் ஈர்த்தால், அதன் மூலம் எதிர்கட்சி உறுப்பினர்களோடு சேர்ந்து தற்போதுள்ள நஜிப் தலைமையிலான தேசிய முன்னணி  அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியும் என்ற கண்ணோட்டத்தில் துங்கு ரசாலியுடனான பேச்சுவார்த்தைகள் நடந்தன என்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றது.

நீண்ட நாளைய அரசியல் கிசுகிசு

துங்கு ரசாலியின் தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் என்பது நீண்ட காலமாக மலேசிய அரசியலில் அவ்வப்போது பேசப்பட்டு வரும் ஓர் அரசியல் ஆரூடமாகும்.

13வது பொதுத்தேர்தலுக்கு முன்பு கூட இந்த ஆரூடம் மீண்டும் மீண்டும் பேசப்பட்டது.

இப்போது துங்கு ரசாலியுடனான சபா, சரவாக் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பு இத்தகைய ஆரூடங்களை மீண்டும் துளிர்விடச் செய்துள்ளது.

அவ்வாறு நடந்தால், அமையவிருக்கின்ற புதிய அரசாங்கத்தில் சபா, சரவாக் மாநிலங்களுக்கு மேலும் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும் என்பதோடு, முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பிரதமராக இருந்து துங்கு ரசாலி, நாட்டை ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடமுடியும் என்ற கண்ணோட்டத்திலும் துங்கு ரசாலியுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான ஊகங்கள் உலவத் தொடங்கியுள்ளன.

இருப்பினும், இத்தகைய ஒரு திட்டம் செயல்வடிவம் பெறுவது அவ்வளவு சுலபமல்ல என்ற கருத்தும் நிலவுகின்றது.

காரணம், துங்கு ரசாலியால் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை மேற்கு மலேசியாவில் இருந்து திரட்டுவது அவ்வளவு சுலபமல்ல. அப்படியே மூன்றாவது அணி உருவாகினாலும், அதற்கு பாஸ், ஜசெக, பிகேஆர் ஆகிய மூன்று கட்சிகளும் ஒரு மனதாக, ஒருமித்த ஆதரவை வழங்குவார்களா என்பதும் சந்தேகமே!