ஜூன் 12 – ம.இ.காவின் சட்டவிதிகள் மீறப்பட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சைகள், புகார்களைத் தொடர்ந்து சங்கப் பதிவிலாகா அந்த கட்சியின் மீது விசாரணை மேற்கொண்டுள்ளதாக உள்துறை துணையமைச்சர் வான் ஜூனாய்டி துவாங் ஜபார் தெரிவித்துள்ளார்.
ம.இ.கா மீது செய்யப்பட்டுள்ள புகார் தொடர்பாக விசாரித்து வரும் சங்கப் பதிவிலாகா தனது முடிவை கூடிய விரைவில் பத்திரிக்கைச் செய்தி வாயிலாகத் தெரிவிக்கும் எனவும் அவர் கூறினார்.
“உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமிடியும் இந்த விவகாரம் தொடர்பாக கண்காணித்து வருகின்றார். சங்கப் பதிவிலாகா எந்த அம்சத்தையும் விட்டுவிடாமல் முழுமையாக ஆராயும்” என்றும் இணைய செய்தித் தளமான ஃபிரி மலேசியா தொடர்பு கொண்டபோது ஜூனாய்டி தெரிவித்தார்.
கிளைத் தலைவர் புகார்
ம.இ.கா எஸ்எஸ் 2 தெங்கா கிளையின் தலைவரான எஸ்.பத்மநாகன் கட்சியின் சட்டவிதிகளுக்கு புறம்பாக ம.இ.கா 3 ஆண்டுகளுக்குள் தனது உட்கட்சித் தேர்தலை நடத்தவில்லை என்பதால் அது குறித்து விசாரிக்க வேண்டும் என புகார் ஒன்றை சங்கப் பதிவிலாகாவிடம் சமர்ப்பித்திருந்தார்.
அந்த புகார் குறித்து வினவியபோதுதான் ஜூனாய்டி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
சங்கப் பதிவிலாகவின் விசாரணை எந்த அளவில் உள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்கக் கோரும் சட்டரீதியான கடிதம் ஒன்றையும் அந்த கிளைத் தலைவர் சங்கப் பதிவிலாகாவுக்கு அனுப்பியிருந்தார்.
கட்சியின் தேர்தல்களை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைப்பதாக ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அறிவித்ததைத் தொடர்ந்து அந்த முடிவு கட்சியின் சட்டவிதிகளுக்கு புறம்பானது என்ற கருத்து மோதல்கள் கட்சியின் எல்லா நிலைகளிலும் பரவி வருகின்றன.
சங்கப் பதிவிலாகாவின் பதில்
இதற்கிடையில், ஃபிரி மலேசியா இணைய செய்தித் தளம் சங்கப் பதிவிலாகாவைத் தொடர்பு கொண்ட போது, “ம.இ.கா மீதான புகாரை நாங்கள் விசாரித்து வருகின்றோம். ஆனால் அது குறித்து நாங்கள் பத்திரிக்கை அறிக்கைகள் விட முடியாது. எங்களின் தலைமை இயக்குநர் அப்துல் ரஹ்மான் ஒத்மான் மட்டுமே இதுபற்றி பேச முடியும். தக்க தருணம் வரும் போது அவர் பெர்னாமா செய்தி நிறுவனத்தின் வழி சங்கப் பதிவிலாகாவின் முடிவைத் தெரிவிப்பார்” என சங்கப் பதிவிலாகாவின் தரப்பில் கூறப்பட்டிருக்கின்றது.
எதிர்வரும் ஜூன் 18ஆம் தேதி நடைபெறும் ம.இ.காவின் மத்திய செயலவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து காரசாரமாக விவாதிக்கப்படும் என்றும் தெரிகின்றது.