Home 13வது பொதுத் தேர்தல் தேர்தல் விதிமுறைகளை மீறி சாஹிட் 10 மடங்கு கூடுதலாக செலவு செய்துள்ளார் – பிகேஆர் குற்றச்சாட்டு

தேர்தல் விதிமுறைகளை மீறி சாஹிட் 10 மடங்கு கூடுதலாக செலவு செய்துள்ளார் – பிகேஆர் குற்றச்சாட்டு

543
0
SHARE
Ad

rafiziகோலாலம்பூர், ஜூன் 12 – நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் உள்துறை அமைச்சரான அகமட் சாஹிட் ஹமீடி பிரச்சாரங்களுக்காக அதிக அளவு பணம் செலவு செய்துள்ளார் என்றும், அது தேர்தல் ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட 200,000 ரிங்கிட்டை விட  10  மடங்கு கூடுதலாகும் என்றும் பிகேஆர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் பொதுத்தேர்தலில் சாஹிட் வாக்குகளை வாங்கியுள்ளார் மற்றும் பிரச்சாரங்களுக்காக அதிக அளவு பணம் செய்துள்ளார் என்று அவருக்கு எதிராக இரண்டு மனுக்களை பிகேஆர் தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது சாஹிட் தனது வலைத்தளத்தில், பாகான் டத்தோ தொகுதியைச் சேர்ந்த 24,000 தேசிய முன்னணி ஆதரவாளர்களை பிரச்சார வேலைகளுக்கு நியமித்திருப்பதாகவும், அவர்களுக்கு தலா 100 ரிங்கிட் மற்றும் 5 கிலோ அரிசியும் வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்த ஒளிநாடா ஆதாரங்களை பிகேஆர் தனது இரண்டு மனுவிலும் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

“தான் போட்டியிடும் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்களையே தேர்தல் பணியாளர்களாக நியமித்து அவர்களிடமிருந்து வாக்குகளை வாங்கியுள்ளார். சாகிட் தன்னை ஒரு சாமர்த்தியசாலி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்” என்று பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.

அதோடு 24,000 தேர்தல் பணியாளர்களுக்கு தலா 100 ரிங்கிட்டும், 5 கிலோ அரிசியும் வழங்கியுள்ள சாஹிட்டின் கணக்கின் படி, அவர் 2 மில்லியனுக்கும் அதிகமாக செலவு செய்துள்ளார் என்று பிகேஆர் தெரிவித்துள்ளது.

சாஹிட் மறுப்புZahid-Hamidi1

பாகான் டத்தோ தொகுதி பிகேஆர் வேட்பாளர் மாதி ஹாசன் மற்றும் அவரது தொகுதி வாக்காளர் அஸ்மி சுலைமான் ஆகியோர் சாஹிட்டுக்கு எதிரான இரண்டு மனுக்களை ஈப்போ உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.

வழக்கறிஞர்கள் எட்மண்ட் போன் மற்றும் சோங் கோக் யியூ ஆகியோர் அந்த இரு மனுக்களின் சார்பாக பிரதிநிதிக்கின்றனர்.

ஆனால் சாஹிட் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து மறுப்பு தெரிவித்ததோடு, தான் தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் பணியாளர்களுக்கு பணம் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் பணிகளுக்காக அவர்களுக்கு கொடுத்த பணம், லஞ்சம் ஆகாது என்றும் சாஹிட் கூறியுள்ளார்.

அதோடு தான் தேர்தல் பணிகளுக்காக அமர்த்தப்பட்டவர்களின் வாக்குகளை வாங்கவில்லை காரணம் அவர்கள் அனைவரும் தேசிய முன்னணி ஆதரவாளர்கள் என்று சாஹிட் தெரிவித்துள்ளார்.