Home நாடு மரணமடைந்த சி.சுகுமார் 141 நாட்களுக்குப் பின்னர் நல்லடக்கம்!

மரணமடைந்த சி.சுகுமார் 141 நாட்களுக்குப் பின்னர் நல்லடக்கம்!

491
0
SHARE
Ad

Sugumar-dead-body---Sliderஜூன் 12 கடந்த ஜனவரி 21ஆம் தேதி, காவல் துறையினரால் விரட்டப்பட்டதாகவும், கைவிலங்கிடப் பட்டதாகவும் பின்னர் அடிக்கப்பட்டதாலும் மரணமடைந்ததாகக் கூறப்படும் 40 வயதான காவலாளியான சி.சுகுமாரின் நல்லுடல் 141 நாட்கள் நீடித்த போராட்டத்திற்குப் பின்னர் இன்று செராசில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

அவரது உடல் மீது இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனையை தாய்லாந்து மருத்துவ நிபுணர் போர்ன்திப் ரோஜனாசுனாந்த் மூலம் மேற்கொள்வதற்கு அவரது குடும்பத்தினரும், வழக்கறிஞர்களும் எடுத்த முயற்சிகள் யாவும் பலனளிக்கவில்லை.

பிகேஆர் உதவித் தலைவரும், சுகுமாரின் குடும்ப வழக்கறிஞருமான என்.சுரேந்திரன், உள்நாட்டு மருத்துவர்களைக் கொண்டு இரண்டாவது பிரேத பரிசோதனையை மேற்கொள்ள தாங்கள் எடுத்த முயற்சிகளையும் அரசாங்கம் தடுத்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இருப்பினும் இன்று நடைபெற்ற சுகுமாரின் இறுதி சடங்குகளில் சுரேந்திரன் கலந்து கொள்ளவில்லை.

அவரது சார்பாக பிகேஆர் கட்சியின் மனித உரிமை, சட்டப்பிரிவு துணைத் தலைவர் எஸ்.ஜெயதாஸ் சுகுமாரின் இறுதி சடங்குகளில் கலந்து கொண்டார்.

சுகுமாரின் குடும்ப உறுப்பினர்களில் சிலர் பத்திரிக்கையாளர்களை இறுதி சடங்குகள் நடைபெற்ற இல்லத்துக்குள் அனுமதிக்கவில்லை என்றும், குடும்பத்தினர் இறுதி மரியாதை செய்ய வேண்டியிருந்ததால் புகைப்படங்கள் எடுக்கவும் அனுமதிக்கவில்லை என்றும் ஜெயதாஸ் கூறினார்.

சுகுமாரின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க, நீதி நிலைநாட்டப்பட தாங்கள் தொடர்ந்து காவல் துறையினருக்கும், அரசாங்கத்திற்கும் நெருக்குதல் வழங்கப் போவதாக சுரேந்திரன் நேற்று விடுத்த பத்திரிக்கை அறிக்கையை ஜெயதாஸ் மீண்டும் வலியுறுத்தினார்.

சுகுமாரின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கே.ஆனந்த கண்ணன் என்பவர், உள்நாட்டு மருத்துவர்களைக் கொண்டு இரண்டாவது பிரேத பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை கடிதம் மூலமாக சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியத்திடம் நேரடியாக தாங்கள் வழங்கியதாகக் கூறினார்.

“அந்த கடிதத்தைத் தான் கவனிப்பதாகவும் என்னுடன் மீண்டும் தொடர்பு கொள்வதாகவும் கூறினார். இருப்பினும் இதுவரை தங்களின் கோரிக்கைக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை” என்றும் அவர் வருத்தமுடன் கூறினார்.

இன்று நடைபெற்ற இறுதிச் சடங்குகளில் பிகேஆர் கட்சியின் சில தலைவர்களும் கலந்து கொண்டனர்.