Home நாடு இணைய செய்தித் தளங்களுக்கு அனுமதி நடைமுறை கொண்டு வரமாட்டோம் – பிரதமர் உறுதி

இணைய செய்தித் தளங்களுக்கு அனுமதி நடைமுறை கொண்டு வரமாட்டோம் – பிரதமர் உறுதி

615
0
SHARE
Ad

najibகோலாலம்பூர், ஜூன் 13 – அண்டை நாடான சிங்கப்பூரில் கொண்டு வரப்படுவதுபோல், இணைய செய்தித் தளங்களுக்கு அனுமதி (லைசென்ஸ்) வழங்கும் நடைமுறையை மலேசியா பின்பற்றாது என பிரதமர் நஜிப் துன் ரசாக் உறுதியளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“எனினும்,நாட்டில் அமைதியை நிலைநாட்ட தற்போது நடப்பிலுள்ள சட்டங்களைப் பயன்படுத்தி, இனவாதத்தை தூண்டுபவர்கள் மீதும், இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வை விதைப்பவர்கள் மீதும், மாமன்னரை தரக் குறைவாக விமர்சிப்பவர்கள் மீதும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை கீழறுப்பு செய்பவர்கள் மீதும் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று பிரதமர் கூறினார்.

நேற்று புதன்கிழமை பெட்ரோனாஸ் நிறுவனமும் மலேசிய பத்திரிக்கைக் கழகமும் இணைந்து வழங்கும் 2012ஆம் ஆண்டுக்கான பத்திரிக்கை விருதுகள் வழங்கும் நிகழ்வில் பிரதமர் இவ்வாறு கூறினார்.

மக்கள் முதிர்ச்சியோடு நடந்து கொள்ள வேண்டுமென்றும், சமூக வலைத் தளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்றும் பிரதமர் மேலும் அறிவுறுத்தினார்.

பதிப்பிக்கப்படும் தகவல்கள் மலேசியக் கலாச்சாரத்திற்கு எதிராகவும், நமது மதிப்பைக் குறைப்பதாகவும் இருக்கக் கூடாது என்றும் கூறிய நஜிப், சமூக வலைத் தளங்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்வதோடு, கொள்கைகளையும் மதிப்பீடுகளையும் கொண்ட சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அதே சமயம் இணையத் தளங்களில் பதிப்பிக்கப்படும் தகவல்கள் மீது கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் எனவும் நடப்பிலுள்ள சட்டதிட்டங்களை அவை மீறக்கூடாது என்றும் அவர் நினைவுபடுத்தினார்.

அண்டை நாடான சிங்கப்பூர், அந்த நாட்டில் 50,000க்கும் மேற்பட்ட வாசகர்களைக் கொண்ட இணையத் தளங்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் சிறப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையை அண்மையில் அறிமுகப்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, மலேசியாவிலும் அதுபோன்ற நடைமுறைகள் கொண்டுவரப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன.

பிரதமரின் உறுதிமொழி அந்த கேள்விகளுக்கு தற்போது முற்றுப் புள்ளி வைத்துள்ளது.