ஜூன் 15 – பேராக் மாநில சட்டமன்ற அவைத் தலைவர் பதவிக்கு ம.இ.காவின் பிரதிநிதி நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்புகளும் சர்ச்சைகளும் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, பேராக் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் பதவிக்கும், சிறப்பு அதிகாரி பதவிக்கும் ம.இ.கா பிரதிநிதிகள் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பேராக் மாநில மந்திரிபெசாரின் இந்தியர் விவகார சிறப்பு ஆலோசகராக ம.இ.கா லுமுட் தொகுதியின் தலைவர் இளங்கோ வடிவேலு நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராக் மாநில அரசாங்க சிறப்பு அதிகாரியாக சிவராஜ் சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ம.இ.கா இளைஞர் பகுதியின் தேசிய செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
நடந்து முடிந்த 13வது பொதுத் தேர்தலில், சிவராஜ் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டவராவார்.
இவர்களின் பதவி நியமனங்கள் எதிர்வரும் ஜூன் 17ஆம் தேதி முதல் அமுலுக்கு வருகின்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் நியமனங்கள் கண்டிப்பாக ம.இ.கா தேசியத் தலைவர் பழனிவேலுவின் ஒப்புதலுடன்தான் செய்யப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
நியமிக்கப்பட்டவர்களும் பழனிவேலுவின் ஒப்புதலுடன்தான் பதவிகளை ஒப்புக் கொண்டிருப்பார்கள் என்றும் தெரிகின்றது.
இதிலிருந்து பார்க்கும்போது, பேராக் மாநில சட்டமன்ற அவைத் தலைவர் பதவியும் ம.இ.காவுக்கே ஒதுக்கப்படும் எனத் தெரிகின்றது.
அப்படி அவைத் தலைவர் பதவி ம.இ.காவுக்கு ஒதுக்கப்படாவிட்டாலும், மாநில அரசாங்கப் பதவிகள் தொடர்பில் ம.இ.காவுக்கும், பேராக் மாநில மந்திரி பெசாருக்கும் இடையில் உடன்பாடு காணப்பட்டிருக்கலாம் என்ற ஆரூடமும் நிலவுகின்றது.