ஜூன் 17 – தலைப்பைப் பார்த்ததும் கதாநாயகன் ஏதோ வாழ்க்கைப் போராட்டம் நடத்தி தீயாய் வேலை செய்து வாழ்க்கையில் உச்சத்திற்கு போகும் கதை என நினைத்துப் படத்தைப் பார்க்கப் போனால் நிச்சயம் ஏமாந்து போவீர்கள்.
தாத்தா-பாட்டி, அப்பா-அம்மா, இரண்டு தமக்கைகள் – இப்படி எல்லோருமே காதல் திருமணம் செய்தவர்களாக இருக்க, கதாநாயகர் சித்தார்த் மட்டும் காதல் என்றதும் காத தூரம் கால் தெறிக்க ஓடுகின்றார்.
ஆனால், ஒரு கட்டத்தில் அவருக்கும் காதல் வர, எப்படி காதலில் வெற்றி பெறுவது என யோசிக்கும்போது, காதலர்களுக்கென சிறப்பு ஆலோசனை சேவை நடத்தி, அதற்கு கட்டணமும் வசூலிக்கும், சந்தானத்திடம் போகிறார் சித்தார்த்.
அவ்வப்போது பணம் வாங்கிக் கொண்டு, ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலும் ஆலோசனை கொடுக்கும் சந்தானம் அவ்வப்போது சித்தார்த்துக்கு கூறும் அறிவுரை வாசகம்தான் ‘தீயா வேலை செய்யணும் குமாரு….”
சித்தார்த்தின் இயல்பான நடிப்பு
கதைப் போக்குக்குப் பொருத்தமாக, அதிகமாக அலட்டல் இல்லாமல் இயல்பாக, ஓர் அலுவலகம் செல்லும் பக்கத்து வீட்டுப் பையன் போன்று நடித்து நம்மைக் கவர்கின்றார் சித்தார்த்.34 வயதான சித்தார்த்துக்கு பள்ளிக்கூட பையனாக ஒரு காட்சியில் நடிக்கும் அளவுக்கு உடல் வெட்டும் முக வெட்டும் அமைந்திருக்கிறது.
காதலில் விழாத சித்தார்த்தைக் கவிழ வைக்கும் பொருத்தமான அழகியாக ஹன்சிகா மொத்வானி சித்தார்த் வேலை செய்யும் அலுவலகத்தில் நுழைகின்றார். அதிகமான வேலை இல்லாவிட்டாலும், அழகாலும், நளினமான முகச் சுழிப்புகளாலும் நம்மைக் கவர்கின்றார்.
முதலில் சாதாரணமாகத் தொடங்கும், திரைக்கதை, போகப்போக சண்டைக்காட்சிகள் இல்லாமல், வில்லன்களின் காட்டுக் கத்தல் இல்லாமல், தமிழ்ப் படத்திற்கே உரிய அரிவாள், துப்பாக்கி இல்லாமல் சூடு பிடிப்பதும், நம்மை ரசிக்க வைக்கும்படி புதியதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதும் இயக்குநர் சுந்தரின் அனுபவத்தைக் காட்டுகின்றது.
பல சிறந்த நகைச்சுவைப் படங்களைத் தந்த சுந்தர் சி. இதிலும் தனது நகைச்சுவைக் கொடியை நாட்டியிருக்கின்றார். படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களையும் முதலில் தனித் தனியாக காட்டி, பின்னர் அவர்களையெல்லாம் ஒருங்கே கொண்டு வந்து திரைக்கதையோடு இணைத்திருப்பது அவரது திரைக்கதை அமைப்பின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகின்றது.
சிறந்த வசனங்கள்
சுந்தருக்கு இணையாக தங்களின் முத்திரையைப் பதித்திருக்கின்றார்கள் படத்தின் வசனகர்த்தாக்கள் நளன் குமாரசாமியும் கருணாகரனும்.
அண்மையில் வெளிவந்து சக்கைப்போடு போட்டதோடு, வித்தியாசமான முறையில் அனைவரையும் கவர்ந்த வசனங்களைக் கொண்டிருந்த “சூது கவ்வும்” படத்தின் இயக்குநர்தான் நளன் குமாரசாமி. அதே சூது கவ்வும் படத்தில் அரசியல்வாதியின் அப்பாவி மகனாக வந்து பின்னர் கைதேர்ந்த அரசியல்வாதியாக உயரும் கருணாகரன்தான் படத்தின் மற்றொரு வசனகர்த்தா.
வித்தியாசமான கோணங்களில் வசனங்களை மனதில் பதியவைக்கும்படி வசனம் எழுதி படத்திற்கு பலம் சேர்க்கின்றார்கள் இந்த இருவரும்.
படத்தின் கதைக்குப் பின்னணிக் களமாக அமைந்திருப்பது ஒரு கணினித் தொழில்நுட்ப (ஐ.டி) அலுவலகம். அந்த அலுவலகத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு பொருத்தமான வசனங்களும், நவீன சாதனங்களான முகநூல், கைத்தொலைபேசி போன்றவற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கூர்மையான வசனங்களும் காட்சிக்கு காட்சி சிரிப்பு மழையை சினிமா அரங்குக்குள் அள்ளிக் கொட்டுகின்றன.
பாடல்கள் சுமார்தான் என்றாலும் தியேட்டருக்கு வெளியே வந்து இன்னொரு முறை கேட்கும் போது பரவாயில்லையே என சொல்லத் தோன்றுகிறது. எங்கேயும் எப்போதும் படத்தின் இசையமைப்பாளர் சத்யாதான் இந்த படத்திற்கும் இசையமைப்பாளர்.
ஒளிப்பதிவும் பளிச்சென இருப்பது படத்தின் இன்னொரு சிறப்பு. குறிப்பாக ஜப்பானில் எடுக்கப்பட்ட பாடல்கள் அந்த நாட்டின் அழகான காட்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன.
படம் முழுக்க வரும் சந்தானம்தான் படத்தின் உயிர்நாடி. முதலில் வழக்கமாக கதாநாயகனுக்கு ஐடியா கொடுக்கும் துணைக் கதாபாத்திரமாக வரும் சந்தானம் போகப்போக படத்தின் முக்கிய கதாபாத்திரமாக மாறுவதும் அவருக்கும் கூட பிளேஷ்பேக் எனப்படும் அவரது கடந்தகால வாழ்க்கை படம் பிடித்துக் காட்டப்படுவதும் படத்தின் மற்றொரு சிறப்பம்சம்.
படம் முழுக்க வரும் சின்னக் கதாபாத்திரங்களுக்குக்கூட முக்கியமான நடிகர்களை நடிக்க வைத்திருக்கின்றார்கள்.
நட்புக்காக விஷால் – சமந்தா
ஒரு காட்சியில் சந்தானத்தின் நண்பராக நடிகர் விஷால் வந்து போகின்றார். கடைசிப் பாடலில் குஷ்புவும் ஒரு பாடலுக்கு வந்து ஆட்டம் போடுகின்றார்.
சித்தார்த்தின் நட்புக்காகவோ, காதலுக்காகவோ ஓரிரு காட்சிகளில் ஒரு கதாபாத்திரத்தில் அழகாக வந்து போகிறார் நடிகை சமந்தா.
கலகலப்புக்குப் பிறகு இன்னொரு கலகலப்பான – நம்மை மறந்து இரண்டரை மணிநேரம் சிரித்து மகிழும் வண்ணம் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தைத் தந்து – தான் ஒரு நகைச்சுவைப் பட மன்னர் என்பதை மீண்டும் ஒரு முறை காட்டி வெற்றிக் கொடி நாட்டியிருக்கின்றார் சுந்தர் சி.
தாராளமாக – தைரியமாகப் படத்தைப் பார்த்து ரசியுங்கள்!
இந்த படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் இணையத் தொடர்பின் வழி காணலாம்.
http://www.youtube.com/watch?v=UsjQKtjr4e0
-இரா.முத்தரசன்