தேர்தல்களை இந்த ஆண்டே நடத்துவதற்கு ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் ஒப்புக் கொள்ளக் கூடும் என்ற ஆரூடங்கள் ஒரு புறம் எழுந்துள்ளன.
காரசாரமான விவாதங்கள் இருப்பினும், மத்திய செயலவை இறுதியில் அடுத்த ஆண்டு தேர்தல்களை நடத்துவதற்கு ஒப்புக் கொள்ளக் கூடும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டுக்குள் நாடெங்கிலும் புதிய கிளைகளை அமைப்பதற்கும், கட்சியில் சில சீரமைப்புக்களை செய்வதற்கும் பழனிவேலுவுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அதனால்தான் ஒத்திவைப்பு தேவையென்றும் பழனிவேலு சார்பான மத்திய செயலவை உறுப்பினர்கள் இன்று விவாதிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில், தேர்தல்களை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கும் கடந்த மத்திய செயலவையின் முடிவுக்கு சங்கப் பதிவிலாகா ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் அதனால், இன்று நடைபெறும் மத்திய செயலவைக் கூட்டம் சங்கப் பதிவிலாகாவின் முடிவால் பிசுபிசுத்துப் போகும் என்ற மற்றொரு எதிர்பார்ப்பும் நிலவுகின்றது.
மூன்று பேர் அதிரடி மாற்றம்
மூன்று நியமன மத்திய செயலவை உறுப்பினர்களை அதிரடியாக பழனிவேல் மாற்றியிருப்பதைத் தொடர்ந்து, பழனிவேலுவுக்கு எதிர்ப்பான குழுவினரின் நடவடிக்கைகள் சற்றே குறைந்திருப்பதாக ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்தன.
காரணம், பழனிவேலுவுக்கு எதிராக குரல் எழுப்பி வரும் முன்னாள் தேசியத் தலைவர் சாமிவேலுவின் புதல்வர் சா.வேள்பாரியும் ஒரு நியமன உறுப்பினர்தான் என்பதால், நிலைமை எல்லை மீறினால் அவரையும் மத்திய செயலவையில் நீக்குவதற்கு தயங்க மாட்டேன் என்பதைக் காட்டுவது போல பழனிவேலுவின் அண்மைய அதிரடி நடவடிக்கை அமைந்துள்ளது என அரசியல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், தேசியத் தலைவருக்கான தேர்தல் முடியும் வரை, சாமிவேலு தரப்பிற்கு எதிரான எந்த முடிவையும் எடுக்காமல் அமைதியாகவே பழனிவேல் செயல்படுவார் என்றும் அவருக்கு நெருக்கமான அரசியல் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அப்படியே மறுநியமனம் செய்வதாக இருந்தாலும், வேள்பாரியையே பழனிவேல் மீண்டும் மறுநியமனம் செய்வார் என்றும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.