கோலாலம்பூர், ஜூன் 18 – நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு தள்ளி வைக்கப்பட்டிருந்த ம.இ.கா கட்சித் தேர்தல், இவ்வாண்டு இறுதிக்குள் நடத்தப்பட வேண்டும் என்று சங்கப் பதிவிலாகா ஆலோசனை கூறியிருப்பதாக ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்தார்.
இன்று நடந்த ம.இ.கா மத்திய செயற் குழு கூட்டத்தில் பேசிய பழனிவேல்,“கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியும், மற்ற போட்டிகள் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும் 3,900 கிளைத் தலைவர்களின் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று குறிப்பிட்ட பழனிவேல், தனக்கு 64 வயதாகி விட்ட காரணத்தால், அடுத்த ஒருமுறை மட்டுமே தான் கட்சித் தலைவராக பொறுப்பு வகிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வரை கட்சி கிளைத் தேர்தல்களும், செப்டம்பர் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை தொகுதிவாரியான தேர்தல்களும் நடத்தப்படும். அத்துடன் கட்சியின் துணைத்தலைவர், மூன்று உதவித்தலைவர்கள் மற்றும் 23 மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத் தொடக்கத்தில் நடத்தப்படும் என்று பழனிவேல் அறிவித்தார்.
இந்த செய்தி தொடர்பான பழனிவேலின் அறிவிப்பை கீழ்காணும் இணைப்பில் காணலாம்.
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=H1HE6CXtWuQ