கோலாலம்பூர், ஜூன் 19 – மலேசியாவிற்கு விற்கப்பட்ட இரண்டு ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான ஊழல் விவகாரத்தை விசாரித்து வரும் பிரஞ்சு நீதிமன்றம், மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு மரணத்தில், தனியார் துப்பறிவாளர் பாலா அளித்துள்ள இரண்டு சத்தியப் பிரமாணங்களையும் விசாரணை செய்யத் திட்டமிட்டுள்ளது.
அதன் காரணமாக, பாலாவின் இரண்டாவது சத்தியப்பிரமாணத்தை விசாரணை செய்து வரும் வழக்கறிஞர்களின் தொடர்பு விவரங்களை, பிரஞ்சு நீதிமன்றம் கோரியுள்ளதாக அரசு சாரா மனித உரிமை இயக்கமான சுவாராம் தெரிவித்துள்ளது.
“அவர்களுக்கிடையே என்ன நடந்தது என்று தெரியாது. ஆனால் சுவாராம் ஏற்பாடு செய்துள்ள நிதி திரட்டும் விருந்தில், அந்த வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்” என்று ஸ்கோர்பியன் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் சோங் இன்று கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அந்த விருந்தில் கலந்து கொள்ளும் இரண்டு வழக்கறிஞர்களும், பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தில் தொடர்புடையவர்கள் என்றும் பீட்டர் தெரிவித்தார்.
வரும் ஜூலை மாதம் 19 ஆம் தேதி, பெட்டாலிங் ஜெயாவில் சுவாராம் சார்பாக, அந்த நிதி திரட்டும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்கார்பியன் ஊழல் விசாரணையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தோடு, இவ்விருந்தின் மூலம் சுமார் 240,000 ரிங்கிட் நிதி திரட்ட சுவாராம் திட்டமிட்டுள்ளது.