சிலாங்கூர், ஜூன் 14 – தனியார் துப்பறிவாளர் பாலாவின் மறைவிற்குப் பிறகு வருமானம் இன்றித் தவித்து வந்த அவரது மனைவி செல்விக்கு, சிலாங்கூர் அரசாங்கம் 10,000 ரிங்கிட் நிதி உதவி செய்துள்ளதோடு, அவரது 3 குழுந்தைகள் பள்ளி செல்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளது.
சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் ரோட்ஸியா இஸ்மாயில், ராவாங் சட்டமன்ற உறுப்பினர் கேங் பா நி மற்றும் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா ஆகியோர் ராவாங்கில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று செல்வியை சந்தித்தனர்.
சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் பொதுநலம் மற்றும் மகளிர் விவகாரங்கள் துறையில் பொறுப்பு வகித்து வரும் ரோட்ஸியா செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாலாவின் மறைவிற்குப் பிறகு அவரது குடும்பம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது.”
“எனவே சிலாங்கூர் அரசாங்கம் செல்விக்கு 10,000 ரிங்கிட் நிதி உதவி செய்வதோடு, அவருக்கு போதுமான மாத வருமானம் கிடைக்கச் செய்யும் வகையில் கேட்டரிங் தொழில் தொடங்கவும் உதவி செய்துள்ளது.”
மேலும் “கடந்த 5 ஆண்டுகளாக அவரது 3 குழந்தைகளும் இந்தியாவில் கல்வி கற்றதால், மீண்டும் மலேசியா பள்ளிகளில் சேர்ந்து படிக்க இயலாத நிலையில் உள்ளனர். எனவே அவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு மாற்று வழிகளை யோசித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.