பெட்டாலிங் ஜெயா, ஜூன் 19 – தேர்தல் முடிவுகளின் மீது அதிருப்தி இருந்தாலும் கூட, வரும் ஜூன் மாதம் 24 ஆம் தேதி நடைபெறவுள்ள பதவி ஏற்பு விழாவில் பக்காத்தானைச் சேர்ந்த 89 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்பார்கள் என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
“இவ்விவகாரம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. நாடாளுமன்ற விளக்கக் கூட்டத்தை மட்டுமே அவர்கள் புறக்கணிக்க முடிவு செய்தனர்” என்று அன்வார் குறிப்பிட்டார்.
“நாங்கள் ஜனநாயகத்தை நம்புகிறோம். எனவே முதல் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவெடுத்திருக்கிறோம். நாடாளுமன்ற சபாநாயகராக முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ அப்துல் காதிர் சுலைமானை ஒருமனதாக தேர்ந்தெடுத்தபோதே பக்காத்தான் நாடாளுமன்ற கூட்டத்தை புறக்கணிக்கப் போவதில்லை என்பது உறுதியாகிறது” என்று அன்வார் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விளக்கமளிப்புக் கூட்டத்தில், பக்காத்தானைச் சேர்ந்த 89 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஜசெக கட்சியைச் சேர்ந்த பக்ரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான எர் தெக் வா மட்டுமே கலந்துகொண்டார். மற்றவர்கள் அனைவரும் கூட்டத்தைப் புறக்கணிக்கும் விதமாக அதில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.