Home 13வது பொதுத் தேர்தல் “தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே சமரசம் என்பது சாத்தியம்” – நஜிப்

“தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே சமரசம் என்பது சாத்தியம்” – நஜிப்

443
0
SHARE
Ad

Najibகோலாலம்பூர், ஜூன் 26 – சமரசப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டுமானால், முதலில் எதிர்கட்சிகள் 13 வது பொதுத்தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சமரசப் பேச்சுவார்த்தைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு பதிலளித்த நஜிப், “ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதில் இனம், மதம், கொள்கைகள் என எல்லா பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கலாம். ஆனால் அதற்கு முன் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும் பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பள்ளிகளில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி வழங்காதது குறித்து கேள்வி எழுப்பிய ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் நே கூ ஹாமிற்கு, நஜிப் பதிலளிக்க மறுத்தார்.

#TamilSchoolmychoice

“இங்கு பல பிரச்சனைகளை எழுப்பலாம். நீங்கள் எங்களைக் குறை கூறுங்கள். நாங்கள் உங்களைக் குறை கூறுகிறோம். இப்படியே நாம் ஒருவரையொருவர் குறை கூறிக் கொண்டே இருந்தால் நம்மாள் முன்னோக்கிச் செல்ல முடியாது. இதற்கு முடிவே இருக்காது” என்று நஜிப் தெரிவித்தார்.

அதோடு, “இது போன்ற விவகாரங்களை தேசிய ஆலோசனைக் குழு அமைத்த பிறகு விவாதிக்கலாம்” என்றும் நஜிப் தெரிவித்தார்.

அடிப்படை ஆதாரமில்லா குற்றச்சாட்டுக்கள்

தேர்தல் முறைகேடுகள் குறித்து எதிர்கட்சிகள் அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக நஜிப் தெரிவித்தார்.

“ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுக்களை சுமத்தாதீர்கள். 40, 000 வங்காள தேசத்தினரை வாக்களிக்க அழைத்து வந்ததாகக் கூறுகிறீர்கள். இதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. தேர்தல் முடிவுகளில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் அரசியலமைப்பிற்கு ஏற்ப செயல்படுங்கள்” என்று நஜிப் கூறினார்.

மேலும், “நாங்கள் அஞ்ச மாட்டோம், ஆனால் எங்களுடைய செயல்பாடுகள் அனைத்தும் அரசியலமைப்பின் அடிப்படையில் தான் இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

இதனிடையே, வாக்களிப்பை கட்டாயமாக்குதல் குறித்து தேசிய முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் அப்துல் லத்தீப் அகமட்டின் கேள்விக்கு பதிலளித்த நஜிப், மக்களை கட்டாயமாக வாக்களிக்க வைப்பது என்பது இயலாத காரியம் என்று தெரிவித்தார்.