கோலாலம்பூர், ஜூன் 28 – தடுப்புக் காவலில் இறந்த குகன் வழக்கில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தேசிய காவல்துறைத் தலைவர் காலிட் அபு பக்கர் மற்றும் காவல்துறைக்கு எதிராக அதிரடியான தீர்ப்பை வழங்கிய கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி வி.டி சிங்கம் தனது பதவியிலிருந்து இன்று விருப்ப ஓய்வு பெற்றார்.
தன்னைப் பற்றி அதிக விளம்பரப்படுத்த விரும்பாதவரான சிங்கம் (வயது 65), உயர்நீதிமன்றத்தில் அனைவரையும் விட மூத்த நீதிபதி ஆவார். கடந்த 2003 ஆம் ஆண்டு நீதித்துறை ஆணையராகப் பதவி ஏற்பதற்கு முன்னாள் தனியார் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“சட்டத்திற்காகவும், நீதித்துறைக்காகவும் தனது வாழ்கை முழுவதையும் தியாகம் செய்தவர்.எனவே ஓர் இடைவெளி வேண்டும் என்று தான் அவர் விருப்ப ஓய்வு பெறுகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் குகன் வழக்கில் வெளியிட்ட தீர்ப்புக்கும், அவரது விருப்ப ஓய்வுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை” என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.