சென்னை, ஜூன் 28- டெல்லி மேல்-சபை தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.பி. கனிமொழி, அக்கட்சியின் தலைவர் கருணாநிதியை சந்தித்து, வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
டெல்லி மேல்-சபைக்கு தமிழக அரசில் இருந்து 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 6 பதவிகளுக்கு, 7 பேர் போட்டியிட்டதால், 17 ஆண்டுகளுக்கு பிறகு வாக்குப்பதிவு நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த வாக்குப்பதிவில், முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட 231 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.
தேர்தல் முடிவு நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 4 பேரும், அக்கட்சியின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் டி.ராஜாவும் பெற்றனர். இந்த வெற்றி ஏற்கனவே தெரியும் என்றாலும், 6-வதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி. யார்? என்பதில் தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க. வுக்கும் கடும் போட்டி நிலவியது. இதில், காங்கிரஸ், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியோரின் ஆதரவை பெற்று, தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்றவுடன், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்ற கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டுக்கு இரவு 8 மணியளவில் வந்தார். அவருக்கு முன்னதாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் காசிமுத்துமாணிக்கம் உள்பட தி.மு.க. தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
கனிமொழி எம்.பி. காரில் வந்தவுடன் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். வீட்டுக்குள் சென்ற கனிமொழி எம்.பி., தி.மு.க. தலைவர் கருணாநிதி, தாயார் ராஜாத்தி அம்மாள் ஆகியோரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். அதனைத்தொடர்ந்து தொண்டர்கள் அவருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
மேல்-சபை தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, “இந்த வெற்றி தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. என்னை 2-வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்க வாக்களித்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள், புதிய தமிழகம் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.