Home அரசியல் முஸ்லீம் மதம் மாற்று சட்டம்: மொழி பெயர்ப்பு தான் தவறுக்குக் காரணம் – சுப்ரா விளக்கம்

முஸ்லீம் மதம் மாற்று சட்டம்: மொழி பெயர்ப்பு தான் தவறுக்குக் காரணம் – சுப்ரா விளக்கம்

618
0
SHARE
Ad

DS-Subraகோலாலம்பூர், ஜூலை 2 – நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள முஸ்லீம் மதம் மாற்று சட்டத்தில் ஏழுந்துள்ள சர்ச்சைக்குக் காரணம் மொழி பெயர்ப்பு தவறு தான் என்று மஇகா துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறியுள்ளார்.

இன்று காலை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சுப்ரமணியம், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மசோதாவில் மலாய் மொழியில் எழுதப்பட்டுள்ள வாசகம் ஆங்கில மொழிக்கு ஏற்றவாறு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நிர்வாக சட்டத்தின் பிரிவு 107 (பி) திருத்தப்படுவதன் மூலம் முன்மொழியப்பட்டுள்ள அந்த மசோதாவில் ஆங்கிலத்தில், குழந்தைகளை  மதம் மாற்றுவதற்கு  ‘பெற்றோர் அல்லது பாதுகாவலருடைய’ (parent or guardian) ஒப்புதல் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதே மசோதா மலாய் மொழி பெயர்ப்பில்,  ‘தாய் அல்லது தந்தை’ ஒப்புதல் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தான் நடந்த தவறுக்குக் காரணம் என்று சுப்ரமணியம் விளக்கமளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அந்த புதிய மசோதா தாக்கல் செய்யப்படும் போது தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகள் அதை பார்க்கவில்லை என்றும், அப்போதே மலாய் மொழி பெயர்ப்பில் மாற்று கருத்துக்கள் இருப்பதை தாங்கள் உணர்ந்ததாகவும் சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த மாற்றுக் கருத்துக்கள் குறித்து அமைச்சரவையில் தெரிவித்துள்ளோம். தற்போது இவ்விவகாரத்தில் சுமூகத் தீர்வு காண்பது குறித்து கலந்தாலோசித்து வருகிறோம்” என்றும் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இம்மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணி கூட்டணிக் கட்சிகளிடையே எதிர்ப்பு கிளம்புமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அந்த நிலை வரை இவ்விவகாரம் செல்லாது” என்று சுப்ரமணியம் உறுதியளித்துள்ளார்.