கோலாலம்பூர், ஜூலை 3 – ‘அரபு புரட்சி’ (Arab Spring) பாணியில் அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடும் நிலை மலேசிய மக்களுக்கு ஏற்படப்போவதில்லை காரணம் கடந்த 55 ஆண்டுகளாக நாட்டில் அமைதியும், வளமும் நிலைத்து வருகிறது என்று பிரதமர் நஜிப் துன் ரசாக நேற்று பிபிசி செய்திக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.
அரசாங்க அலுவல் காரணமாக நான்கு நாட்கள் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நஜிப், நேற்று அங்கு பிபிசி செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் அளித்தார்.
அதில் எகிப்தில் நடப்பது போல் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராடும் நிலை மலேசியாவில் ஏற்படுமா? என்று நேர்காணலின் போது கேட்கப் பட்ட கேள்விக்கு, நஜிப் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
மேலும், “மலேசியாவில் இப்போது அரசாங்கம் வழங்கும் திட்டங்களில் மாற்றம் தேவையே தவிர, அரசாங்கத்தையே மாற்ற வேண்டிய நிலை இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தல் முடிவுகள் குறித்து எழுந்துள்ள பிரச்சனைகள் பற்றி கேள்வி கேட்கப்பட்ட போது, “பொதுத்தேர்தல் முடிவுகள் உண்மை தான். அவை எந்த ஒரு பாரபட்சமும் இன்றி நியாயமான முறையில் நடத்தப்பட்டது. இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. நாங்கள் வெளிப்படையானவர்கள்” என்று நஜிப் கூறியுள்ளார்.