Home அரசியல் தேச நிந்தனை சட்டத்தை ரத்து செய்ய கடந்த ஆண்டே அமைச்சரவை முடிவு செய்தது – நஸ்ரி

தேச நிந்தனை சட்டத்தை ரத்து செய்ய கடந்த ஆண்டே அமைச்சரவை முடிவு செய்தது – நஸ்ரி

790
0
SHARE
Ad

Nazri Abdul Azizஜூலை 9 – மதம் மாற்றுச் சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளதோடு அந்த சட்டத்தின் சர்ச்சை ஒரு முடிவுக்கு வர, தற்போது தேச நிந்தனை சட்டத்தின் மீதான சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன.

அமைச்சர்களுக்கிடையில் தேச நிந்தனை சட்டம் தொடர்பான மாற்றுக் கருத்துக்கள் தொடர்ந்து நிலவி வருகின்றன. நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த சுற்றுலாத் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் கடந்த ஆண்டே தேசநிந்தனை சட்டத்தை மீட்டுக் கொள்ள அமைச்சரவை முடிவு செய்ததாக கூறியிருக்கின்றார்.

இது மற்ற அமைச்சர்கள் கூறிவருவதற்கு முற்றிலும் நேர்மாறானது என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

“அரசாங்க தலைமை வழக்கறிஞரின் அலுவலகம் இது குறித்து நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றது என்பதோடு சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தைகளும் நடத்தி வருகின்றது. இதற்கு மாற்று சட்டத்தை இயற்றுவது குறித்தும் ஆராயப்படுகின்றது” என்றும் நஸ்ரி மேலும் கூறினார்.

மேலும், “அது பொதுமக்கள் மத்தியில் பிரதமர் அளித்த வாக்குறுதி, அதற்கு எதிராக சில அமைச்சர்கள் ஏன் குரல் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை” என்று நஸ்ரி தெரிவித்தார்.

பிரதமர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்

தேச நிந்தனைச் சட்டத்தை ரத்து செய்வது குறித்த தனது வாக்குறுதியை பிரதமர் மாற்றிக்கொள்வதாய் இல்லை. அவர் தொடர்ந்து அவரது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் என்று நஸ்ரி கூறினார்.

தேச நிந்தனைச் சட்டம் நீக்கப்படக் கூடாது என்று உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி குரல் கொடுத்து வருகிறார். அதோடு, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தேச நிந்தனைச் சட்டம் குறித்து அமைச்சரவை விவாதிக்கும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த நஸ்ரி, “ பல அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டதால், ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த அந்த கூட்டம் குறித்து சுப்ரமணியம் மறந்திருக்கலாம். ஆகவே தேச நிந்தனைச் சட்டம் தொடர்பாக அடுத்தடுத்த கூட்டங்கள் எதுவும் இனி இருக்காது” என்று நஸ்ரி தெரிவித்தார்.

மேலும், “அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகம் இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தும் என்று பிரதமர் எங்களிடம் தெரிவித்துள்ளார்” என்றும் நஸ்ரி கூறினார்.

தேச நிந்தனைச் சட்டத்தை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக தேச நல்லிணக்க சட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த வருடம் ஜூலை மாதம் பிரதமர் நஜிப் அறிவித்தபோது, நஸ்ரி அப்போது அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்தார்.

அதே நேரத்தில், அந்த அமைச்சரவையில், சாஹிட் ஹமீடி பாதுகாப்பு அமைச்சராகவும், சுப்ரமணியம் மனிதவள அமைச்சராகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.