கோலாலம்பூர், ஜூலை 9 – அரசாங்கம் தொடர்பான தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில், முன்னாள் அமைச்சர்களுக்கு உயர் பதவிகள் வழங்குவது ஏன் என்று பக்காத்தான் கேள்வி எழுப்பியுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் நங் யென் யென் மற்றும் முன்னாள் தகவல் தொடர்பு அமைச்சர் ராயீஸ் யாத்திம் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கும் பதவி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “இது போன்று எத்தனை முன்னாள் அமைச்சர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் விளக்கமளிக்க வேண்டும்” என்றும் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இன்று அன்வார் கேள்வி எழுப்பியுள்ளார்.
யென் யென் மலேசிய சுற்றுலா வாரியத்தின் தலைவராகவும், ராயீஸ் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் (Universiti Islam Antarabangsa) நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.