கோலாலம்பூர், ஜூலை 10 – தேச நிந்தனைச் சட்டம் 1948 ஐ ரத்து செய்வது குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டதா? இல்லையா? என்று தான் சுற்றுலாத் துறை அமைச்சர் நஸ்ரியுடன் போரிட விரும்பவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் (படம் -இடது) தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுப்ரா இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ நாங்கள் இருவரும் இவ்விவகாரம் குறித்து போரிடத் தேவையில்லை என்று நினைக்கிறேன். கொள்கை அளவில் நாங்கள் அதை ஏற்றுக்கொண்டுள்ளோம். ஒருவேளை நல்லிணக்கச் சட்டத்தால் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்றால், தேச நிந்தனைச் சட்டத்தை நீக்குவதில் தவறில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசநிந்தனைச் சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக தேச நல்லிணக்கச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுவிட்டது என்றும், ஆனால் தேச நல்லிணக்கச்சட்டம் இன்னும் கொண்டு வரப்படவில்லை என்றும் சுப்ரா தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை, தேச நிந்தனைச் சட்டம் தொடர்பாக சுப்ரா வெளியிட்ட அறிக்கையில், பிரதமரின் முடிவுப் படி தேச நிந்தனைச் சட்டத்திற்குப் பதிலாக தேச நல்லிணக்க சட்டம் கொண்டு வரப்படும். அது குறித்து அமைச்சரவை பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவெடுக்கும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், சுப்ராவின் அறிக்கையை மறுத்த சுற்றுலாத்துறை அமைச்சர் நஸ்ரி (படம் – வலது), தேச நிந்தனைச் சட்டத்தை மாற்றுவது என அமைச்சரவை ஏற்கனவே முடிவெடுத்துவிட்டதாகவும், சுப்ரா அதை மறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
தேச நிந்தனைச் சட்டத்தை நீக்கி விட்டு, அதற்கு பதிலாக தேச நல்லிணக்க சட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த வருடம் ஜூலை மாதம் பிரதமர் நஜிப் அறிவித்தபோது, நஸ்ரி அப்போது அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராகவும், சுப்ரமணியம் மனிதவள அமைச்சராகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.