Home நாடு வேதமூர்த்தியின் அதிரடி தலையீட்டால் இரண்டு இந்தியர்கள் தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்பு!

வேதமூர்த்தியின் அதிரடி தலையீட்டால் இரண்டு இந்தியர்கள் தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்பு!

515
0
SHARE
Ad

Waytha-Sliderஜூலை 11 – புதிதாக துணையமைச்சராகப் பதவியேற்ற பி.வேதமூர்த்தியின் அதிரடி தலையீட்டால், காவல் துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட இரண்டு இந்திய தோட்டத் தொழிலாளிகள் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

பாங்கி தோட்டத்தைச் சேர்ந்த சி.கிருஷ்ணன் மற்றும் கே.ராஜன் இருவரும் பாங்கி தோட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த தோட்டத்தை டிரான்ஸ் லோயல் டெவலப்மெண்ட் என்ற நிறுவனம் வாங்கிவிட்டு அந்த நிலத்தை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றது.

இருப்பினும், அங்கு முன்பு வசித்த தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனை 2,000ஆம் ஆண்டு முதல் இன்னும் தீர்க்கப்படாமல் இழுபறியாகவே இருந்து வருகின்றது.

இந்நிலையில், கிருஷ்ணன், ராஜன் இருவரும் டிரான்ஸ் லோயல் நிறுவனத்தினரை பாங்கி தோட்டத்தில் பணிகளை மேற்கொள்வதில் இருந்து தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து எழுந்த விவகாரத்தில் காவல் துறையினர் அவர்களை விசாரணைக்காக காஜாங் காவல் துறை நிலையத்திற்கு வரச் சொல்லியிருந்தனர்.

ஆனால் அங்கு சென்ற இருவரையும், காவல் துறையினர் அடுத்த 48 மணி நேரத்திற்கு அவர்களை தடுப்புக் காவலில் வைப்பதாக தெரிவித்தனர். உடனே அவர்கள் வேதமூர்த்தியை தொடர்பு கொள்ள காஜாங் காவல் நிலையத்திற்கு விரைந்த வேதமூர்த்தி, இந்த விவகாரத்தில் தலையிட்டார்.

கைது செய்யப்பட்டவர்களுக்காக வேதமூர்த்தி வாதம்

அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து இந்த இருவரையும் காவலில் வைக்குமாறு தங்களுக்கு உத்தரவு கிடைத்திருப்பதாக காவல் துறையினர் வேதமூர்த்தியிடம் கூறியிருக்கின்றனர்.

“நில மேம்பாட்டாளருக்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் எத்தனையோ புகார்களைக் கூறியிருந்தாலும் அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக புகார் பதிவு செய்தவுடன் மட்டும் உடனடியாக நடவடிக்கையில் இறங்குவது ஏன்? ஏன் இந்த இரட்டை அணுகுமுறை? ஏழைத் தொழிலாளர்களிடம் ஏன் இந்த மிரட்டல்கள்?” என்றெல்லாம் வேதமூர்த்தி காவல் துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்த இருவரிடமும் கேள்விகள் கேட்டுவிட்டு, விசாரணைகள் நடத்தி விட்டு அவர்களை விடுவிக்க வேண்டும் என வேதமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

நில மேம்பாடுகளால் தங்களின் வசிப்பிடங்களை இழந்து தவிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைகளைக் களைய வேண்டும் என ஹிண்ட்ராப் இயக்கத்திற்கும் பிரதமர் நஜிப்பிற்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் உணர்வுகளை மீறுவதாக காவல் துறையின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகவும் வேதமூர்த்தி இந்த விவகாரத்தில் குறை கூறியுள்ளார்.

இதுபோன்ற பிரச்சனைகளை அதிகாரத்தில் உள்ளவர்கள் முறையாகக் கையாளாவிட்டால் இந்தியர் விவகாரங்களைத் தீர்த்து வைக்க நஜிப் கொண்டிருக்கும் கடப்பாட்டின் மீது கறைபடியச் செய்து விடும் என்றும் வேதமூர்த்தி சுட்டிக் காட்டினார்.

இந்த தகவல்களை ஃபிரி மலேசியா இணையத் தளம் செய்தியாக வெளியிட்டுள்ளது.