Home இந்தியா இன்று 111-வது பிறந்த நாள்: காமராஜருக்கு கருணாநிதி புகழாரம்

இன்று 111-வது பிறந்த நாள்: காமராஜருக்கு கருணாநிதி புகழாரம்

725
0
SHARE
Ad

சென்னை, ஜூலை 15– காமராஜர் பிறந்தநாளையொட்டி அவருக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி புகழாரம் சூட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது:–

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா இன்று! மறைந்த தலைவர்கள் மற்றும் சான்றோர்கள் யாராயினும் அவர்களுக்கும் நமக்கும் எவ்வளவு கொள்கை வேறுபாடுகள், கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் அவர்களின் சிறப்புகளையும், சீலமிகு செயல்களையும், செயற்கரிய மக்கள் பணிகளையும், தியாகங்களையும், ஆற்றலையும், என்றைக்கும் நாம் மறந்ததில்லை, மறவாமல் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

#TamilSchoolmychoice

முதன் முதலாக தமிழகத்திலே காமராஜருக்கு சிலை அமைத்த பெருமை தி.மு.க. பொறுப்பிலே இருந்த சென்னை மாநகராட்சியைச் சேர்ந்தது.

VBK-KARUNA_144975fகாவிரி பிரச்சினை, நெருக்கடி கால நிலை என்பன போன்றவற்றில் ஒவ்வொரு முடிவிற்கு முன்பும் அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் ஆயிற்றே என நினைக்காமல், அனுபவத்தில் மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் அவரை நான் அணுகி அவருடைய வீட்டிற்கே சென்று அவருடைய கருத்துக்களைத் தெரிந்து கொண்டு அவ்வாறே செயல்பட்டிருக்கிறேன்.

அண்ணா தமிழகத்தின் முதல்– அமைச்சராக இருந்து நடத்திய 2–வது உலகத் தமிழ் மாநாட்டின்போது மாநாட்டிற்கு வந்தவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றி அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தவர் காமராஜர்தான்.

தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பிரதமர் வாஜ்பாயிடம் வலியுறுத்தி, வாதாடிப்பெற்று குமரிக் கடற்கரையில் காமராஜருக்கு ஏற்றமிகு மணிமண்டபம் ஒன்றை நான் எழுப்பியதை எவர்தான் மறந்திட இயலும்? சென்னை கடற்கரை சாலை, கழக ஆட்சியில் காமராஜர் சாலை ஆயிற்று. மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் காமராஜர் பெயர் தாங்கி நிற்பதற்கு காரணம்.

விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை நினைவகம் ஆக்கியது, சென்னையில் அவர் உடலை அடக்கம் செய்ய கிண்டியில், அண்ணல் காந்தி அடிகளின் பெயரால் உள்ள மண்டபத்திற்குப் பக்கத்திலேயே இடம் தேடி அங்கே எழிலார் நினைவகம் அமைத்தது போன்றவை கர்மவீரர் காமராஜர் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் ஆற்றிய தொண்டுக்கு கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட எளிய காணிக்கைளாகும்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு காமராஜரின் தாயார் பெயர் நினைவில் நிலைத்திருக்கும் வகையில் ‘அன்னை சிவகாமி அம்மையார் வளாகம் என்று பெயர் சூட்டியதும், அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு சிவகாமி அம்மையார் பெயரைச் சூட்டி அதை நடைமுறைப்படுத்தியதும், காமராஜரின் ஊழியராகப் பணியாற்றிய வைரவன் என்பவரை சென்னை காமராஜர் நினைவகத்தில் வழிகாட்டியாக அரசு ஊதியத்தில் அமர்த்தியதும், அவர் குடியிருக்க அரசு குடியிருப்பில் வீடு வழங்கியதும் கழக ஆட்சிதான்.

என் அருமை அன்னையார் அஞ்சுகம் அம்மையார் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 27.1.1963 அன்று இயற்கை எய்தியபோது அவரது உடல் என் வீட்டிற்கு வந்து சேருவதற்கு முன்பே, அப்போது முதல்– அமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் எனக்கு நேரில் ஆறுதல் கூறுவதற்காக, நான் வந்து சேரும் முன்பே என் இல்லத்திற்கு வந்து காத்திருந்தது என்னால் என்றைக்கும் மறக்க முடியாத மனிதாபிமானம் மிக்க நிகழ்ச்சியாகும்.

மு.க.ஸ்டாலின் திருமணத்தின்போது நேரில் சென்று அவரை அழைத்தேன். உடல் நலிவைக் காரணம் காட்டி வர இயலாதே என்று வருத்தப்பட்டார்.

அவர் வரவேண்டும் என்பதற்காகவே திருமண மண்டபத்தை வேறு இடத்திற்கு மாற்றி, அவர் வரும் கார், மேடைக்கே வந்து அவர் மேடையிலேயே இறங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அவரும் வந்திருந்து வாழ்த்தியது எனக்கும், தம்பி ஸ்டாலினுக்கும் என்றும் பசுமையான நினைவில் பதிந்திருக்கும் நிகழ்ச்சியாகும்.

காமராஜர் பிறந்த நாளை தமிழகமெங்கும் நினைவு கூர்ந்திடும் வகையில் கல்வி வளர்ச்சி நாள் என்ற பெயரில் அனைத்துக் கல்வி கூடங்களிலும் கொண்டாட வேண்டுமென்று அறிவித்து, அதனை அடுத்து வருகின்ற ஆட்சியினர் மாற்றி விடக்கூடாதே என்பதற்காகவே சட்டமாகவே இயற்றினேன்.

இவைகள் எல்லாம், இந்த பாராட்டுக்கள் எல்லாம், இந்த சிறப்புகள் எல்லாம், இந்தப் புகழுரைகள் எல்லாம், நான் அரசியலிலே காமராஜரை எதிர்த்துப் பேசிய பேச்சுக்கள், நான் ஈடுபட்ட செயல்கள் இவைகளுக்கெல்லாம் ஒரு பரிகாரமாக என்னை மாற் றுகின்ற அளவிற்கு இருந் தன என்பதைச் சொல்ல விரும்புகிறேன். பெருந் தலைவர் காமராஜர் புகழ் வாழ்க!

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.