Home நாடு கடந்த 5 ஆண்டுகளில் நஜிப் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவு 44.1 மில்லியன்

கடந்த 5 ஆண்டுகளில் நஜிப் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவு 44.1 மில்லியன்

473
0
SHARE
Ad

najibகோலாலம்பூர், ஜூலை 17 – கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது குழு மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான மொத்த செலவு 44.1 மில்லியன் என்று நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜசெக வின் தைப்பிங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ங்கா கோர் மிங்கின் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் துறை அமைச்சர் ஷாஹிடன் காஸிம், கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி 2013 ஆம் ஆண்டு மே மாதம் வரை இந்த பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

இருப்பினும், இந்த பயணச் செலவுகளின் கணக்கு, நஜிப்பின் பயணங்கள் மட்டுமா அல்லது அவருக்கு முன் பிரதமராக இருந்த அப்துல்லா அகமட் படாவி மேற்கொண்ட பயணங்களையும் சேர்த்து கூறப்படுகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஷாஹிடன், ” அவை நஜிப் துணைப்பிரதமராக இருந்தபோது மேற்கொண்ட பயணங்களாக இருக்கலாம்” என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், நஜிப் மற்றும் அவரது குழு இது போன்ற வெளிநாட்டு பயணங்களுக்கு எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று கோர் மிங் கேள்வி எழுப்பிய போது, “பாக் லா பிரதமராக இருந்தபோது 5 வருடங்களில் 30 மில்லியன் ரிங்கிட் செலவானது” என்று ஷாஹிடன், அப்துல்லா படாவியின் புனைப் பெயரை சொல்லி குறிப்பிட்டார்.

ஷாஹிடன் கூறிய கணக்குப்படி, மாதம் 734,516.67 ரிங்கிட் செலவு ஆகியுள்ளது. இது படாவி செலவு செய்ததை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு, இந்த வெளிநாட்டுப் பயணங்களுக்கான காரணங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட பயன்கள் ஆகியவற்றை அனைத்து மலேசியர்களுக்கும் தெரியும் வகையில் வெளிப்படுத்த வேண்டியது நஜிப்பின் கடமை என்று ங்கா கோர் மிங் கூறினார்.