Home கலை உலகம் கவிஞர் வாலி வாழ்க்கை குறிப்பு

கவிஞர் வாலி வாழ்க்கை குறிப்பு

3493
0
SHARE
Ad

ஜூலை 19- எம்.ஜி.ஆரின் புகழ்மிக்க பாடல்கள் பலவற்றை எழுதியவர் கவிஞர் வாலி. ஓவிய ஆசிரியராக இருந்து நாடக துறைக்கு சென்று பின்னர் அங்கிருந்து சினிமாவுக்கு வந்து தனது அற்புதமான பாடல்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை மகிழ்வித்தவர் வாலி.
vaali18713
திரைப்பட பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் என பன்முகங்களை கொண்ட கவிஞர் வாலியின் இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன். இவர் கடந்த 1931-ம் ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் சீனிவாச அய்யங்கார். தயார் பெயர் பொன்னம்மாள்.

எஸ்.எஸ்.எல்.சி. படித்த பிறகு சென்னை ஓவிய கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் படித்தார். ஸ்ரீரங்கத்தில் இருந்த போது ‘நேதாஜி’ என்ற பெயரில் கையெழுத்து பத்திரிகை நடத்தி இருக்கிறார்.

சிறு வயதிலேயே கவிதை, நாடகங்கள் எழுதுவதில் வாலிக்கு அலாதி பிரியம். திரைப்பட துறைக்கு வருவதற்கு முன்பு திருச்சி அகில இந்திய வானொலியில் இவரது நாடகங்கள் ஒலிபரப்பாகி இருக்கின்றன.

#TamilSchoolmychoice

வாலியை சினிமாவுக்கு பாட்டெழுத அழைத்து வந்தவர், சமீபத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும் போது, “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்” என்ற பாடலை ஒரு தபால் அட்டையில் எழுதி டி.எம்.சவுந்தரராஜனுக்கு அனுப்பி வைத்தார். அந்த பாடல் பின்னர் டி.எம்.சவுந்தரராஜனின் இனிமையான குரலில் பரவசப்படுத்தியது.

டி.எம்.சவுந்தரராஜனுடன் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து சென்னைக்கு வந்த அவர் சினிமாவில் பாட்டு எழுத தொடங்கினார்.
Vaali_1521222h
காதல், தாலாட்டு, வீரம், தத்துவம், சோகம், பாசம், குறும்பு, கேலி, கிண்டல், விரக்தி, பக்தி என எல்லா வகையான பாடல்களையும் வாலி எழுதி இருக்கிறார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் காலத்தில் இருந்து, பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் என தொடர்ந்து இப்போதுள்ள புதுமுக நடிகர்களுக்கும் அவர் பாடல்கள் எழுதி இருக்கிறார். திரை உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.

எம்.ஜி.ஆரின் பெரும்பாலான படங்களுக்கு வாலி பாடல் எழுதி இருக்கிறார். எம்.ஜி.ஆருக்காக ‘படகோட்டி’ படத்தில் இவர் எழுதிய அத்தனை பாடல்களும் பிரபலம். ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘எங்க வீட்டுப்பிள்ளை’, ‘எங்கள் தங்கம்’, ‘ரிக்ஷாக்காரன்’ என எம்.ஜி.ஆரின் எல்லா வெற்றிப்படங்களுக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார். எம்.ஜி.ஆரின் கொள்கைகளை விளக்கும் கருத்துக்களை பாடல்களில் அற்புதமாக சேர்த்து அவருடைய பேரன்பை பெற்றவர்.

‘கலியுக கண்ணன்’, ‘கடவுள் அமைத்த மேடை’, ‘ஒரு செடியில் இரு மலர்கள்’, ‘சிட்டுக்குருவி’, ‘ஒரேயொரு கிராமத்தில்’, ‘சாட்டை இல்லாத பம்பரங்கள்’ உள்பட 17 திரைப்படங்களுக்கு வாலி திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். மாருதி ராவுடன் சேர்ந்து ‘வடைமாலை’ என்ற படத்தை இயக்கி உள்ளார்.

சிறுகதை, கவிதை, உரைநடை என 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை கவிஞர் வாலி எழுதி இருக்கிறார். அவற்றுள் அவதார புருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம், நிஜ கோவிந்தம், அம்மா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இயக்குனர் கே.பாலசந்தரின் ‘பொய்க்கால் குதிரை’, மற்றும் ‘ஹே ராம்’ மற்றும் ‘சத்யா’, ‘பார்த்தாலே பரவசம்’ ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.

வாலி 5 முறை சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை பெற்று இருக்கிறார். 1 எங்கள் தங்கம் (1970), இவர்கள் இப்படித்தான் (1979), வருஷம் 16, அபூர்வ சகோதரர்கள் (1989), கேளடி கண்மணி (1990), தசாவதாரம் (2008) ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்காக அவருக்கு தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்தது.

கடந்த 2007-ம் அண்டு மத்திய அரசு வாலிக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்தது.

வாலியின் மனைவி பெயர் ரமண திலகம். வாலி இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரமண திலகம் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். வாலி-ரமண திலகம் தம்பதிக்கு பாலாஜி என்ற ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கிறார்.