Home கலை உலகம் மூன்று தலைமுறைகளுக்குப் பாட்டெழுதிய பெருமை பெற்ற கவிஞர் வாலி

மூன்று தலைமுறைகளுக்குப் பாட்டெழுதிய பெருமை பெற்ற கவிஞர் வாலி

2251
0
SHARE
Ad

(தமிழ்த் திரையுலகில் கண்ணதாசனுக்கு அடுத்து அதிகமான பாடல்களை எழுதியவர், இலக்கியச் சாரத்தை திரைப்படப் பாடல்களில் கலந்து கொடுத்தவர், எல்லாவற்றுக்கும் மேலாக மூன்று தலைமுறைகளுக்கு திரைப்பாடல் எழுதியவர் என பெருமை பெற்ற கவிஞர் வாலியின் நினைவு நாள் இன்று ஜூலை 18. அதனை முன்னிட்டு அவரை நினைவு கூரும் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் நக்கீரன்)

கற்பனை என்றாலும்

கற்சிலை என்றாலும்

#TamilSchoolmychoice

கந்தனே உன்னை மறவேன்.. ..

ஓராறு முகமும் ஈராறு கரமும்.. .

-என்றெல்லாம் பக்தி மணம் கமழக் கமழ இயற்றிய திருமுருக வணக்கப் பாடல்கள்தான் கவிஞர் வாலியை கோடம்பாக்கத்தின் வாசல்களில் கொண்டு சென்று நிறுத்தியது.

திருப்பராய்த்துரையில் பிறந்து காவிரி நீரைப் பருகியபடி திருவரங்கத்தில் வளர்ந்த வாலி, கையெழுத்து ஏட்டின் ஆசிரியராக இளம் வயதிலேயே உருவானவர். இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன்; ஓவியக் கலைமீதும் நாட்டம் இருந்தது. அந்தக் கட்டத்தில் பள்ளித் தோழன் போகிற  போக்கில் சூட்டிய பட்டப் பெயரான வாலியிலேயே நிலை கொண்டு கோடம்பாக்கத்தில் கொலுவீற்றிருந்த கவிதைக் கோமான் பத்மஸ்ரீ வாலி.

ஆனால், இந்த நிலையை எட்டுவதற்கு முன் திரைப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பு கேட்டு, திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றுவிடாமல் ஏறி இறங்கி, எங்கும் வாய்ப்பு கிட்டாத நிலையில் ஒடிந்த மனதோடும் வாடிய முகத்தோடும் திருச்சிக்கேத் திரும்ப நினைத்தவர் வாலி;

ஆனால் அந்த சமயத்தில், பி.பி.சீனிவாஸ் குரலில் ஒலித்த “மயக்கமா கலக்கமா” என்ற பாடலைக் கேட்டு மன ஆறுதலும் தேறுதலும் பெற்றார் வாலி. அதன் பின்னரே மனதை மாற்றிக் கொண்டு தனது பாடல் எழுதும் முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்தினார்.

சுமைதாங்கி என்னும் திரைப்படத்திற்காக கவியரசு கண்ணதாசன் இயற்றிய அப்பாடலுக்கு உள்ளத்தை அள்ளும் வண்ணம் விசுவநாதன்-இராமமூர்த்தி இரட்டையர் இசை அமைத்திருந்தனர். அந்தப் பாடலைக் கேட்டு ஊக்கம் பெற்ற வாலி, மனதில் புதிய நம்பிக்கை கொண்டு, மீண்டும் திரைப்படப்பாடல் துறையில் தீவிரமாக ஈடுபட்டார்.

வெற்றியும் பெற்றார். எந்தக் கண்ணதாசனின் பாடலைக் கேட்டு மனம் மாறி மீண்டும் திரைப்படப் பாடல் துறைக்குத் திரும்பினாரோ, பின்னாளில் அந்தத் துறையிலேயே கண்ணதாசனின் போட்டியாளராக உருவெடுத்தார்.

தமிழின்பால் பற்றும் இலக்கிய நாட்டமும் இயல்பாகவே வாய்க்கப்பெற்ற வாலி, வானொலி நாடக ஆசிரியர், சிற்றிதழ் ஆசிரியர், ஓவியக் கலைஞர், எழுத்தாளர், புதின படைப்பாளி, கவிஞர் என்றெல்லாம் விளங்கினாலும் திரைப்பட பாடலாசிரியராகத்தான் புகழையும் பொருளையும் பேரளவில் ஈட்டினார்.

காதல், தத்துவம், சகோதரப்பாசம், இறைமை, அரசியல், இலக்கியம் உள்ளிட்ட சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக பாடல்களை இயற்றிய வாலி, கதைக்கும் கதை மாந்தருக்கும் ஏற்ப ஆழமான கருத்தையும் எளிமையான சொற்களையும் கொண்டு உள்ளத்தை அள்ளும் விதமாகவும் கிள்ளும் வண்ணமாகவும் பதினைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றினார்.

தமிழ் இலக்கியப் பாட்டையின் நெடிய வரலாற்றில், கடந்த இருபதாம் நூற்றாண்டிலும், இந்த நூற்றாண்டிலும் திரைப்படங்களுக்காக புனையப்பட்ட பாடல்களும் தமிழ் இலக்கியத்தின் ஓர் அங்கம் என்றாகிவிட்டது. பாசமலர் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மலர்ந்தும் மலராத’ என்று தொடங்கும் பாடல், இலக்கிய நயத்தின் உச்சம். இதைப் புனைந்தவர் கவிப்பெருமகன் கண்ணதாசன்.

இதைப் போலவே, ‘இரு மலர்கள்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்’ என்று தொடங்கும் பாடலும், காதல் பாடலாக இருந்தாலும் அதில் இலக்கிய நயம் ததும்பும். இந்தப் பாடலையும் கண்ணதாசன்தான் எழுதியிருப்பார் என்று எத்தனையோ பேர் ஆரம்பத்தில் எண்ணியதுண்டு; அப்படிப்பட்டவர்களில் நானும் ஒருவன். ஆனால், அந்தப் பாடலை இயற்றியவர் வாலிப முறுக்குடன் கடைசிவரை வலம் வந்த கவிஞர் வாலி என்பது பின்னர் தெரிய வந்தது.

அதைப்போல, 1969-இல் வெளிவந்த பூவா தலையா என்னும் திரை ஓவியத்திற்காக வாலி இயற்றிய “மதுரையில் பறந்த மீன் கொடியை” என்று தொடங்கும் பாடலிலும் கவிநயமும் இலக்கியச் சாரலும் நிறைந்திருக்கும்.

திரைப்பட நடிகருமான இவர், திரைப்பட வரலாற்றில் மூன்று தலைமுறை நடிகர்களுக்கு பாட்டெழுதி வரலாறு படைத்தவர்; ஆரம்பத்தில் சிவாஜி-எம்ஜிஆர்-ஜெய்சங்கர் வரிசையைத் தொடர்ந்து கமல்-ரஜனி-விஜயகாந்த் என அடுத்தக்கட்ட நடிகர்களுக்காக ஏராளமான பாடல்களை இயற்றிய வேளையில் தொடர்ந்து, சூரியா-விஜய்-அஜீத் என்று மூன்றாம்கட்ட நடிக-நடிகையருக்காகவும் பாடல்களை புனைந்தார்.

கோடம்பாக்கத்தின் போக்கிற்கேற்ப தன்னையும் அவ்வப்பொழுது தக அமைத்துக் கொண்டதால்தான், வாலியால் இப்படி தாக்குப்பிடிக்க முடிந்தது. அதனால்தான் காதலர் தினம் என்ற படத்தில்,

‘கடலுக்கு ஃபிஷிங் நெட்டு

காதலுக்கு இண்டர்நெட்டு’-

என்றெல்லாம் அவரால் எழுத முடிந்தது.

ஆனாலும் ‘ஒஸ்தி’ என்னும் படத்தில் இடம்பெற்ற ‘ஒஸ்தி மாமே’; ‘கலசலா; சலாசலா’; ஆகிய பாடல்கள், இந்து படத்திற்காகத் தீட்டிய ‘சக்கரைவள்ளிக் கிழங்கு மாமா சமைஞ்சது எப்படி?’ என்று தொடங்கும் பாடல்; அதைப்போல வால்டர் வெற்றிவேல் படத்திற்காக எழுதிய ‘சின்ன ராசாவே கட்டெறும்பு என்னைக் கடிக்குது’  என்றெல்லாம் வாலி வரைந்த பாடல்கள் விமர்சனத்திற்கும் முகச் சுழிப்பிற்கும் உள்ளாயின.

எது எவ்வாறாக இருந்தபோதும், எம்ஜிஆருக்காக ஏராளமான பாடல்களைப் புனைந்த கவிஞர் வாலியின் புகழ் தமிழ்ச் சமுதாயத்தில் என்றும் நிலைபெற்றிருக்கும். 1931-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 29-ஆம் நாளில் திருச்சியில் பிறந்த வாலியின் கையைப் பிடித்து கோடம்பாக்கத்திற்கு அழைத்து வந்தவர் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்.

ஒரு திரைப்படத்தில் (தூக்கு தூக்கி) அனைத்துப் பாடல்களையும் பாடும் வாய்ப்பைப் பெற்றவர் திருச்சி லோகநாதன். அதனால், கட்டணத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளும்படி படக்குழுவினரால் கேட்கப்பட்டதாம். அந்த நேரத்தில், புகழின் உச்சத்தில் இருந்த லோகநாதன், “அதெல்லாம் ஆகாது; வேண்டுமென்றால் பக்திப்பாடல்களை பாடி வருகின்ற டி.எம்.சௌந்தரராஜனை வைத்துப் பாடிக்கொள்ளுங்களேன்” என்று ஏதோவொரு வேகத்தில் சொன்னாராம்.

அந்த நேரத்தில் திரையுலகத்தில் நுழைந்தவர்தான் சௌந்தரராஜன். மெல்ல புகழ் நிலைக்கு உயர்ந்துவிட்ட நிலையில், தனக்காக ஆரம்பத்தில் பக்திப் பாடல்களை எழுதித் தந்த வாலிக்கு திரைப்பட பாடலாசிரியராக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி சென்னைக்கும் அழைத்து வந்தார்.

கலியுகக் கண்ணன், காரோட்டிக் கண்ணன், ஒரு கொடியில் இரு மலர்கள், சிட்டுக் குருவி, ஒரேயொரு கிராமத்திலே போன்ற படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி, தன்னை ஒரு வசன எழுத்தாளராகவும் நிலைநிறுத்தினார் வாலி.

திரைப்பட பாடல்களைத் தவிர, தமிழ் இலக்கிய உலகிற்கு கவிதைப் படைப்பு, சிறுகதை நூல், உரை நடை என ஏறக்குறைய 20 நூல்களையும் இயற்றியவர் வாலி. பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், அம்மா, பொய்க்கால் குதிரை, அவதார புருஷன் போன்றவை அவரின் படைப்புகளில் சில.

கலைஞர் மு. கருணாநிதி, எம்ஜிஆர் இருவரும் திரைப்படத் துறையில் தண்டவாளத்தைப் போல விளங்கினாலும் அரசியலில் இருதுருவங்களாகிய நிலையில் இருவரிடமும் நட்பு பாராட்டியவர் வாலி.

ஒரு கவியரங்க நிகழ்ச்சியில் கலைஞரை ஆண்டவரே (தமிழ் நாட்டை முன்பு ஆண்டவர்) என்று அழைத்தார் வாலி. 1969-இல் வெளி வந்த நிறைகுடம் என்ற திரைக்காவியத்திற்காக ஆண்டுக்கு ஆண்டு என்று தொடங்கும் தத்துவப் பாடலை சமதரும சிந்தனை மிளிர இயற்றினார். அப்பாடலில் இடம்பெற்ற

“அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு

ஆயுள் முழுவதும் சுப தினம்”

என்று வரைந்த வார்த்தை ஓவியம் உன்னதமானது; உயர்வானது.

இவ்வாறாக, கோடம்பாக்கத்து திரை வட்டத்திலும் புனித ஜார்ஜ் கோட்டை அரச மட்டத்திலும் செல்வாக்குடன் விளங்கிய பத்மஸ்ரீ வாலி, 2013 ஜூலை18-ஆம் நாளில் தமிழ் இலக்கிய உலகில் இருந்து  நிரந்தரமாக விடைபெற்றார்.

-நக்கீரன்