ஜூலை 22 – ம.இ.கா வின் முன்னாள் உதவித்தலைவரான டத்தோ எஸ்.சோதிநாதன், பழனிவேல் தன்னை நியமித்திருக்கும் மத்திய செயற் குழு உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா என்று யோசித்து வருவதாக ம.இ.கா வட்டாரங்கள் கூறுகின்றன.
காரணம், ம.இ.கா தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், இந்த நியமனத்தால் சோதிக்கு எந்த ஒரு அரசியல் நன்மையும் ஏற்படப்போவதில்லை. தவிர, வரும் ம.இ.கா தலைமைத்துவ தேர்தலில் பழனிவேல் மற்றும் சுப்ரமணியத்திற்கு எதிராக தனது செல்வாக்கை இழக்கவும் வாய்ப்பு உள்ளது.
ஆகையால், மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியை சோதி புறக்கணிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து நம்நாடு பத்திரிக்கை கடந்த சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில், மத்திய செயற்குழு உறுப்பினர் பதவி குறித்து கருத்து கேட்க சோதியை நாடிய போது அவர் கருத்து கூற மறுத்துவிட்டார் என்று தெரிவித்துள்ளது.
இதன் மூலம், சோதி இன்னும் இந்த பதவி நியமனத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சோதியின் செல்வாக்கு
கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த கட்சியின் துணைத்தலைவருக்கான தேர்தலில், ம.இ.கா இரண்டு பெரிய புள்ளிகளுக்கு எதிராக சோதி 280 வாக்குகள் பெற்றார். எனவே சோதிக்கு இன்னும் கட்சியில் மிகுந்த செல்வாக்கு உள்ளது.
இருப்பினும், சோதியின் ஆதரவாளர்கள் கூறுகையில், மத்திய செயற் குழு பதவியை ஏற்றுக்கொள்வதன் மூலம், தான் பழனிவேலால் நியமிக்கப்பட்ட ஆள் என்ற பெயர் கிடைத்துவிடும் என்று சோதி யோசித்து வருகிறார் என்று கூறுகின்றனர். தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு, செப்டம்பர் 1 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதால், சோதி தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
மேலும், சோதி ஒருவேளை கட்சியின் உதவித்தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதாக முடிவெடுத்தால் அவர் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம். அதோடு, நவம்பர் மாதம் கட்சி தேர்தல் நடைபெறுவதால் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவி நியமனம் 3 மாதங்களுக்கு மட்டுமே நீடிக்கும். இதனால் அவருக்கு பெரிய நன்மை எதுவும் இல்லை. மாறாக அவரை அரசியலில் பலவீனமடையவே செய்யும்.
நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலில் தெலுக் கெமாங் தொகுதியில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று கடந்த 5 ஆண்டுகளாக சோதி பிரச்சாரம் செய்து வந்தார். ஆனால் பழனிவேல் அவருக்குப் பதிலாக டத்தோ வி.எஸ் மோகனை தேர்ந்தெடுத்தார்.
சாத்தியக்கூறுகள் அனைத்தையும் ஆராய்ந்துவரும் சோதி
சோதிக்கு நெருக்கமான தெலுக் கெமாங் தொகுதி கிளைத்தலைவர்களுள் ஒருவர் கூறுகையில், “பழனிவேல் தன்னை பொதுத்தேர்தலில் புறக்கணித்தது குறித்து சோதி மிகவும் அதிருப்தியில் இருக்கிறார். இந்த விவகாரம் முதலில் சரிசெய்யப்பட வேண்டும். அதோடு, தலைமைத்துவ தேர்தலுக்குப் பிறகு சோதிக்கு வழங்கப்படும் பொறுப்புகள் குறித்து பழனிவேல் இன்னும் தெளிவாகக் கூறவில்லை.
பழனிவேல் சோதிக்கு எந்த வகையில் ஆதரவு தெரிவிக்கப்போகிறார் துணைத்தலைவர் பதவிக்கா ? அல்லது உதவித் தலைவர் பதவிக்கா? ஒருவேளை பழனிவேல் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, கட்சியின் மற்ற பதவிகளுக்கான தேர்தலில் நடுநிலைமையாக செயல்படுவதாக முடிவெடுத்தால், சோதி தனது பதவிக்காக தனித்து போராட வேண்டிய நிலை வரும்.
இதனால் சுப்ரா ஆதரவாளர்கள் சோதிக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள். அதோடு, சுப்ரா குழுவில் கட்சியின் முக்கியப் பொறுப்புகளுக்கு ஏற்கனவே சரியான வேட்பாளர்களைத் தேர்வு செய்து விட்டார்கள். பிறகு எதற்காக சோதி மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்டு, சுப்ரா – சரவணன் போன்றவர்களின் ஆதரவாளர்களின் நன்மதிப்பைக் கெடுத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆகவே, பழனிவேலின் நியமனத்தை புறக்கணித்தால் தான் சோதியால் தான் இன்னும் எந்த பக்கமும் சேரவில்லை என்பதை காட்டமுடியும். இதன்மூலம் ஏதாவது ஒரு குழுவுடன் தனது சொந்த கொள்கைகளோடும், நிபந்தனைகளோடும் இணைந்து கொள்ள முடியும் என்றும் சோதியின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.