Home இந்தியா மோடிக்கு விசா வழங்கக்கூடாது என்று ஒபாமாவுக்கு அனுப்பிய கடிதத்தில் எம்.பி.க்கள் கையெழுத்து மோசடியா?

மோடிக்கு விசா வழங்கக்கூடாது என்று ஒபாமாவுக்கு அனுப்பிய கடிதத்தில் எம்.பி.க்கள் கையெழுத்து மோசடியா?

619
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜூலை 25- குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு விசா வழங்கக்கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு இந்திய எம்.பி.க்கள் 65 பேர் எழுதிய கடிதத்தில் போலி கையெழுத்து இடம் பெற்று இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த உத்தரவிடும்படி, சபாநாயகரை பா.ஜனதா வற்புறுத்தி உள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற வகுப்புவாத கலவரத்தை தொடர்ந்து, அமெரிக்கா செல்ல நரேந்திர மோடிக்கு விசா வழங்குவது இல்லை என்று, அந்த நாட்டு அரசு முடிவு எடுத்தது.

MODIபா.ஜனதா கட்சியின் அடுத்த பிரதமர் வேட்பாளர் ஆகும் அளவுக்கு கட்சியின் முன்னணி தலைவராக நரேந்திர மோடி தற்போது உயர்ந்து இருக்கிறார். இந்த நிலையில், அமெரிக்க அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவை சேர்ந்த 65 எம்.பி.க்கள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு கடிதம் எழுதிய தகவல் நேற்று முன்தினம் வெளியானது. சுயேச்சை எம்.பி.யான முகமது அதீப் முயற்சியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கையெழுத்திட்டு உள்ளனர்.

அவர்களில் சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), அச்சுதன் (இந்திய கம்யூனிஸ்டு) ஆகிய இரு எம்.பி.க்கள் அந்த கடிதத்தில் தாங்கள் கையெழுத்திடவில்லை என்று மறுப்பு தெரிவித்து இருந்தனர். தி.மு.க.வை சேர்ந்த கே.பி.ராமலிங்கம் எம்.பி.யும், கடிதத்தில் கையெழுத்திடவில்லை என்று நேற்று மறுப்பு தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து அந்த கடிதத்தில், எம்.பி.க்களின் கையெழுத்து போலியாக போடப்பட்டதா? என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அப்படி எந்த ஒரு கடிதத்திலும் கையெழுத்திட்டதாக நினைவில்லை என்று திட்டவட்டமாக மறுத்த சீதாராம் யெச்சூரி, இது ‘வெட்டி ஒட்டும்’ வேலையாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

கேரள மாநிலத்தை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மேல்-சபை எம்.பியான அச்சுதனும் ஒபாமாவுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்டதாக நினைவு இல்லை என்று வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார்.

ஆனால், இதற்கான முயற்சியை மேற்கொண்ட சுயேச்சை எம்.பி.யான அதீப், அனைத்து எம்.பி.க்களும் கையெழுத்திட்டது உண்மைதான் என்று நேற்று அறிவித்தார்.

இது தொடர்பான எத்தகைய விசாரணையையும் சந்திக்க தயார் என்று அறிவித்துள்ள அவர், கையெழுத்துகள் போலி என்று நிரூபிக்கப்பட்டால் எம்.பி. பதவியில் இருந்து விலகுவதாகவும் சவால் விடுத்தார்.

இதற்கிடையில், எம்.பி.க்களின் போலி கையெழுத்து தொடர்பான சர்ச்சை குறித்து பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இந்த தவறுக்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ஜனதா வற்புறுத்தி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலம், லோகர்டகா தொகுதி பா.ஜனதா எம்.பி.யான சுதர்ஷன் பகத், இது குறித்து பாராளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இந்த பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், ‘‘இடது சாரிகள் முதலாளித்துவ அமெரிக்காவை விமர்சிக்கிறார்கள். ஆனால், நரேந்திர மோடிக்கு விசா மறுப்பதற்கு அமெரிக்காவின் உதவியை நாடியது ஏன்?’’ என்றும், ‘‘இந்திய தேர்தல் கள போட்டிக்கு அமெரிக்காவை சேர்ந்த 3-வது நடுவர் தேவையா?’’ என்றும் கேள்வி எழுப்பினார்.

பா.ஜனதாவின் மற்றொரு செய்தி தொடர்பாளரான பிரகாஷ் ஜவடேகர், இந்திய எம்.பி.க்கள் உண்மையிலேயே ஒபாமாவிற்கு கடிதம் எழுதினார்களா? என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினார்.

ஆனால், இந்த விவகாரத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இதுகுறித்து அதன் செய்தித்தொடர்பாளர் ராஜ்பப்பர் கூறியதாவது:-

அரசியலை விட நாடு பெரியது. இந்த விவகாரம் குறித்து காங்கிரசின் எந்த மட்டத்திலோ, பாராளுமன்றத்திலோ நாங்கள் விவாதிக்கவில்லை. இது எங்களுக்கு ஒரு பிரச்சினையே அல்ல. மற்றபடி, தனிநபர்கள் என்ன செய்து வருகிறார்கள் என்று எங்களுக்கு தெரியாது.

எம்.பி.க்கள் தங்கள் கையெழுத்து போலியாக போடப்பட்டதாக கருதினால், பாராளுமன்ற உரிமைக்குழுவை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.