கோலாலம்பூர், ஜூலை 26 – ஜசெக கட்சியின் பதிவை ரத்து செய்வதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை. அதே நேரத்தில் புதிய கட்சியை தொடங்குவது குறித்து ஜசெக கட்சியில் உள்ள எந்த ஒரு தலைவரோ அல்லது உறுப்பினரோ கூறவில்லை என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.
ஜ.செ.க கட்சியின் பதிவு நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும், அவர்கள் புதிய கட்சி துவங்குவதற்காக விண்ணப்பித்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் சங்கப் பதிவிலாகா ( Registrar of Societies – ROS) தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மான் இன்று ‘தி ஸ்டார்’ நாளேட்டின் மூலம் அறிக்கை விடுத்திருந்தார்.
அதோடு, ஜசெக புதிய கட்சியை துவங்குவதை விட தற்போதுள்ள கட்சியை தற்காப்பதற்கான நடவடிக்கைகளை அக்கட்சியின் உறுப்பினர்களும், அதன் தலைவர்களும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை கூறியிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அறிக்கை விடுத்த லிம் கிட் சியாங், “இது அம்னோ ஆதரவாளர்களால் வெளியிடப்பட்ட ஒரு அடிப்படை ஆதாரமற்ற ஒரு செய்தி. ஜசெக வின் பெயருக்கு களங்கம் விளைவிக்க தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்கள் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அம்னோ ஆதரவாளர்கள் கூறுவதைத் தவிர ஜசெகாவில் இருந்து இதுவரை யாரும் புதிய மத்திய செயற் குழு குறித்து எந்த ஒரு கோரிக்கையையும் விடுக்கவில்லை.
அப்படி இருக்கும் போது, “கட்சியைத் தற்காத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அப்துல் ரஹ்மான் கூறியிருப்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.