Home இந்தியா பொது வாக்கெடுப்பு நடத்துவதே ஈழத்தமிழர் நலனுக்கு உகந்த தீர்வு: கருணாநிதி

பொது வாக்கெடுப்பு நடத்துவதே ஈழத்தமிழர் நலனுக்கு உகந்த தீர்வு: கருணாநிதி

422
0
SHARE
Ad

சென்னை, ஜூலை 27- தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல் அமைச்சருக்குப் பிரதமர் 16-7-2013 அன்று எழுதிய கடிதத்தில் “இலங்கையில் அரசியல் அதிகாரங்களை ஒருங்கிணைப்பது மற்றும் தன்னாட்சி உரிமை அளிப்பது குறித்த பிரச்சினையில் மத்திய அரசின் நிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. இலங்கையில் எல்லாச் சமுதாயத்தினரும், குறிப்பாக இலங்கைவாழ் தமிழர்கள் அங்கு ஒருங்கிணைந்து வாழும் வகையில் அவர்களுக்குத் தலைமைப் பொறுப்பை அளித்து ஓர் உகந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே நம்முடைய நாள்பட்ட கோரிக்கையாகும். இலங்கைவாழ் தமிழர்களுக்கு
இத்தகைய தன்னாட்சி உரிமை அளிக்கும் வரையில் நம்முடைய பணி தொடரும்” என்று எழுதியிருக்கிறார்.

karunanaithiபிரதமர் கடிதத்தில் தெரிவித்திருக்கும் செய்திகள் நமக்கு ஆறுதலானவை. இலங்கைத் தமிழர் விவகாரத்தில், அந்த நாட்டு அரசு 13வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையையே நீர்த்துப் போகச் செய்து, அதனை உயிரற்ற ஒன்றாக ஆக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பது நம் கவனத்திற்கு வந்தவுடனேயே, 9-6-2013 அன்று பிரதமருக்கு நான் விரிவாக கடிதம் எழுதினேன். இதற்கும் பிரதமர் ஆறுதலான பதிலை எழுதினார்.

#TamilSchoolmychoice

நம்முடைய கடிதம் மட்டுமல்ல; கடந்த மாதம் 18-6-2013 அன்று இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகள் இந்தியப் பிரதமரை டெல்லியில் சந்தித்து, 13வது சட்டத் திருத்தம் நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டுமென்று கேட்டபோது, “இலங்கைத் தமிழர்களைக் கைவிட்டு விடமாட்டோம், பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர்களிடம் பிரதமர் தெரிவித்த கருத்தும் அப்போதே ஏடுகளிலே வெளிவந்துள்ளது.

இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பன்னெடுங்காலமாக வாழ்ந்துவரும் தமிழர்கள், இலங்கையின் பூர்வக் குடிமக்களாக விளங்கிய போதிலும், அவர்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு இரண்டாந்தரக் குடிமக்களாகக் கருதப்படுகிற இன்றைய நிலைக்கு எதிராக நடத்திய பல்வகை தொடர் போராட்டங்கள் பயன் தராத நிலையிலும், இலங்கை அரசின் அடக்கு முறை காரணமாகவும், இலட்சக்கணக்கானோர் சொந்த நாட்டிலேயே அடிமைகளாக வாழவும், மேலும் பல இலட்சக்கணக்கானோர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்து
வாழவும் வேண்டியிருக்கிறது.

13வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது என்பதும்; இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்களுடைய கருத்தினைக் கேட்டுத் தீர்வு காண்பதுதான், ஈழத் தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும் என்பதும்தான், “டெசோ” அமைப்பின் நிலைப்பாடாகும். இருப்பினும் தற்காலிகத் தீர்வாகவாவது, ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பயன்பட வேண்டும் என்று “டெசோ” அமைப்பு கருதுகிறது.

இக்கோரிக்கையை வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெறவுள்ள “காமன் வெல்த்” மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வற்புறுத்தியும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியும் “டெசோ” இயக்கத்தின் சார்பில் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் “தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்” நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.