புத்ரா ஜெயா, ஆகஸ்ட் 2 – ஒரினப்புணர்ச்சி வழக்கில் எதிர்கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம்முக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்ற துணைப்பதிவாளர் தர்மாபிக்ரி அபு ஆடாம் முன் இன்று இந்த வழக்கு மேலாண்மைக்கு வந்த போது இந்த தேதிகளை அவர் நிர்ணயம் செய்தார்.
இதனிடையே, இந்த மேல் முறையீட்டு வழக்கில் டத்தோ ஸ்ரீ முகமட் சபி அப்துல்லா அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு தலைமை தாங்குவதை நிராகரிக்கக் கோரி தாங்கள் விண்ணப்பம் செய்யப்போவதாக அன்வாரின் வழக்கறிஞர் சங்கீட் கௌர் டியோ கூறியுள்ளார்.
தர்மாபிக்ரி இம்மேல்முறையீட்டு விசாரணைக்கு நிர்ணயம் செய்த அதே தேதியில், அரசு தரப்பு வழக்கறிஞர் குழுவின் தலைவராக முகமட் சபி ஆஜராவதை நிராகரிக்கக் கோரும் அன்வாரின் விண்ணப்பமும் விசாரணைக்கு வருவதாகவும் சங்கீட் கௌர் தெரிவித்துள்ளார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் குழுவிற்கு தலைமை தாங்கும்படி சபி, கடந்த ஜூலை 2 ஆம் தேதி சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேலால் நியமிக்கப்பட்டார்.
கடந்த வருடம் ஜனவரி மாதம், கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் ஓரினப்புணர்ச்சி வழக்கில் இருந்து அன்வாரை விடுதலை செய்தது. தனது முன்னாள் உதவியாளர் முகமட் சைபுல் புகாரி அஸ்லானை ஓரினப்புணர்ச்சி செய்தார் என்று அன்வார் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.