பினாங்கு, ஆகஸ்ட் 6 – பினாங்கு மாநில ஆட்சியாளர்களும், ஆட்சிக்குழு உறுப்பினர்களும் தங்களது சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று இன்றைய ஆட்சிக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.
பொதுத்தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு பினாங்கு அரசாங்கம் தங்களது சொத்து விவரங்களை அறிவிக்க முன்வந்திருப்பதாகவும் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
ஆனால் ஆட்சியாளர்களின் குடும்பத்தினர் தங்களது சொத்து விவரங்களை வெளியிடத்தேவையில்லை.
ஏன் ஆட்சியாளர்களின் குடும்பத்தினர் தங்களது சொத்து விவரங்களை வெளியிடத்தேவையில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த லிம், 13 வது பொதுத்தேர்தலில் போது பக்காத்தான் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மாநில ஆட்சியாளர்கள் மட்டுமே சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று வாக்குறுதி அளித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
“நாங்கள் எங்கள் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை பின்பற்றி, எங்களது நேர்மையை நிரூபிக்கவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.