கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – தான் பிரதமராக இருந்த காலத்தில் தன்னை அறியாமல் கண் அயறும் ‘தூக்க நோயால்’ அவதிப்பட்டதாகவும், அதற்கான மருத்துவ சோதனைகளை நாடியதாகவும் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவி தான் எழுதிய ‘அவேக்கினிங் தி அப்துல்லா இயர்ஸ் இன் மலேசியா – AWAKENING THE ABDULLAH BADAWI YEARS IN MALAYSIA’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு துன் மகாதீருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த படாவி, பல வேளைகளில் தன்னை அறியாமல் தாம் தூங்குவதையும், குறட்டை சத்தத்தையும், மறைந்த தனது மனைவி எண்டோன் மஹ்மூட்டும், சக நண்பர்களும் சுட்டிக்காட்டியதாக கூறியிருக்கிறார்.
தனக்கு வந்திருக்கும் தூக்க நோய் குறித்து புத்ர ஜெயா மருத்துவமனையில் தனது நண்பர்களில் ஒருவரான பல்விண்டர் சிங்கிடம் மருத்துவ ஆலோசனை செய்ததாகவும், அவர் தன்னை சோதனை செய்து ‘சிலீப் ஹெப்பினியா’ என்ற தூக்க நோய் வந்திருப்பதாகக் கூறியதாகவும் படாவி தனது புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.
இந்த நோய் உள்ளவர்கள் வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது கூட தன்னை அறியாமல் தூங்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் தனக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும், அதன் பிறகு ஆஸ்திரேலியா சென்று மூக்கில் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் படாவி கூறியுள்ளார்.
“என்னை அறியாமல் நான் தூங்கிய நாட்களில் தேசிய முன்னணியைச் சேர்ந்த சிலரும், வெளியிலுள்ள சிலரும் என்னைப் படமெடுத்து, நிகழ்ச்சிகளில் தூங்குவதாக இணைய தளங்களில் விமர்சித்தார்கள்”
“கடந்த 2008 ஆம் ஆண்டு எனது அதிகாரத்துவ இல்லத்தில் நடந்த ஒரு போராட்டத்தின் போது அதில் கலந்து கொண்ட ஒரு கும்பல் எனக்கு தலையணையைப் பரிசாகக் கொடுத்தார்கள். நாட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்க துன் அப்துல்லா தூங்குகிறார் என்று விமர்சித்தார்கள்” என்று படாவி அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “என் நிலை குறித்து ஏற்கனவே மகாதீரிடம் கூறியிருந்தேன். ஆனால் நான் எனது வேலையில் அக்கறை இல்லாதவன் போல் நடத்தப்பட்டது தான் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. என் உண்மையான நிலையை மகாதீர் அறிந்தும் கூட என்னைப் பற்றி அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்” என்று படாவி தனது தூக்க நோய் குறித்து விளக்கமளித்துள்ளார்.