Home கலை உலகம் முதல் நாள் திரை விமர்சனம்: “சென்னை எக்ஸ்பிரஸ்” – ஷாருக்கானின் ஜாலியான, கலகலப்பான தமிழ் நாட்டு...

முதல் நாள் திரை விமர்சனம்: “சென்னை எக்ஸ்பிரஸ்” – ஷாருக்கானின் ஜாலியான, கலகலப்பான தமிழ் நாட்டு பயணம்!

1363
0
SHARE
Ad

Chennai-Express-Featureஆகஸ்ட் 9 – ஆண்டு தோறும் ரம்ஜான் பண்டிகைக்கு சல்மான் கான் நடித்த ஏதாவது ஓர் இந்திப் படம் வெளியாகி இந்திப்பட ரசிகர்களை குதூகலப்படுத்தும். ஆனால், இந்த ஆண்டு, சல்மான் கான் ஒதுங்கிக் கொள்ள,  ரம்ஜான் பண்டிகை சிறப்பு வெளியீடாக ஷாருக்கானின் “சென்னை எக்ஸ்பிரஸ்” உலகமெங்கும் வெளியாகி சக்கைப் போடு போட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

தமிழ்ப்பட ரசிகர்களுக்கு இந்தப் படத்தைப் பார்த்தால் இந்திப் படம் பார்த்த உணர்வே எழாது. ஏதோ ஒரு தமிழ்ப்படத்தை பார்த்த உணர்வுதான் ஏற்படும். அந்த அளவுக்கு நமக்கு பழக்கமான தமிழகக் கிராமங்கள், இராமேஸ்வரம் என படத்தின் கதைக்களம் பயணிக்கின்றது. இன்னொரு புறத்திலோ, நமக்கெல்லாம் நன்கு அறிமுகமான தமிழ் நடிகர்களான சத்யராஜ், டில்லி கணேஷ், மோகன்ராம், மற்றும் தமிழ்ப்படங்களில் அடிக்கடி இடம் பெறும் பரிச்சயமான முகம் கொண்ட வில்லன்கள் என நமக்குத் தெரிந்த முகங்கள் ஒருபுறம்.

கதைக்களம்

பெற்றோரை ஒரு கார் விபத்தில் சிறுவயதில் இழந்த 40 வயதுக்கார ஷாருக்கான் தாத்தா – பாட்டி அரவணைப்பில் ஜாலியாக எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் சுகமாக, பணக்காரத்தனமாக வளர்கின்றார். தாத்தாவின் இனிப்புப் பலகார கடையை கவனித்துக் கொள்ளும் அவருக்கு காதலிகள் மட்டும் கிட்டுவதில்லை.

நூறு வயதான கிரிக்கெட் பிரியரான தாத்தா, தனது 100வது வயதில் திடீரென்று காலமாகின்றார். அவர் எப்படி இறக்கின்றார் என்பதை  படத்தைப் பார்த்து சிரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தாத்தாவின் இறுதி ஆசை தனது அஸ்தியைப் பாதி கங்கையிலும், மறு பாதியை தமிழ் நாட்டின் புனித இடமான இராமேஸ்வரத்திலும் கரைக்கவேண்டும் என்பது. ஷாருக்கானின் பாட்டி கங்கையில் கரைக்கும் பணியை முடித்து விட்டு, முதுமை காரணத்தால் இராமேஸ்வரம் செல்ல முடியாததால் அங்கே சென்று அஸ்தியை கரைக்கும் பணியை ஷாருக்கானிடம் ஒப்படைக்கின்றார்.

அதே நேரத்தில், அவரது நண்பர்கள் கோவாவுக்கு ஜாலி பயணம் போகலாம் என தூபம் போட, தன்னை வழியனுப்ப இரயில் நிலையம் வரை வரும் பாட்டியை ஏமாற்ற சென்னை எக்ஸ்பிரஸ் என்ற இரயிலில் ஏறுகின்றார் ஷாருக்கான். வழியில் அடுத்த இரயில் நிலையத்தில் இறங்கி அங்கு காத்திருக்கும் நண்பர்களுடன் கோவாவுக்கு ஜாலி பயணம் செல்வதுதான் திட்டம்.

ஆனால், இரயில் கிளம்பும் போது ஓடி வந்து ஏறும் கதாநாயகி தீபிகா படுகோனை கைதூக்கி ஏற்றிவிட, தீபிகாவுக்கு பாதுகாப்பாக பின்தொடரும் குண்டு குண்டு வில்லன்கள் என அவர்களின் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு, தமிழகக் கிராமம் ஒன்றில் சிக்கிக் கொள்ளும் ஷாருக்கானின் கலகலப்பான, நகைச்சுவையும் சுவாரசியமும் கலந்த பயணம்தான் சென்னை எக்ஸ்பிரஸ்’.

சென்னை எக்ஸ்பிரஸ் என்ற வார்த்தைகளுடன், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் என்றும் மாறாத கணீர்க் குரல் அசரீரி பாடலுடன் தொடங்கும் ஷாருக்கானின் இரயில் பயணம், பின்னர் தமிழகக் கிராமப் பகுதி ஒன்றின் தாதாவான சத்யராஜ், அவரது மகள் தீபிகா, அவர்களுடைய குடும்பம், தீபிகாவின் கல்யாணப் பிரச்சனை, தீபிகாவை கல்யாணம் பண்ணிக் கொள்ளத் துடிக்கும் தங்கபள்ளி என்ற ஆஜானுபாகு வில்லன் என பல சுவாரசியமான சம்பவங்களுடன் பயணிக்கின்றது.

படம் முழுக்க தமிழகக் கிராமங்களின் கலாச்சார அமைப்பையும், பின்னணியையும் காட்டியிருப்பது படத்தின் மற்றொரு சிறப்பம்சம்!

முதலில் காதலிப்பவர்கள் போல் நடிக்கும் ஷாருக்கும், தீபிகாவும் பின்னர் உண்மையிலேயே காதலில் விழ, அவர்களைத் துரத்தும் வில்லன்கள் என தமிழ் நாட்டு கிராமப் பகுதிகளில் அவர்களின் அடுத்த கட்ட ஓட்டமும் பயணமும் தொடர்கின்றது.

படத்தின் இயக்குநர் ரோஹிட் ஷெட்டி, எல்லா காட்சிகளையும் புதுமையாக சிந்தித்து இதுவரை நாம் மற்ற படங்களில் பார்த்திராத வண்ணம் அமைத்திருக்கின்றார். ஒரே ஒரு குறை, கில்லி படத்தில் திரிஷாவை விஜய் கழுத்தில் அரிவாளை வைத்து கடத்திச் செல்லும் காட்சியை மட்டும் அப்படியே சுட்டு, இந்தப் படத்திலும் வைத்துவிட்டார்.

அதே போன்று, தமிழகக் கிராமம் என்றாலும் அவற்றை பிரம்மாண்டமான பின்னணியுடன் ஏராளமான நடிகர்களுடன் எடுத்திருக்கின்றார். காட்டுப் பாதை, ஆற்றின் மேல் இரயில் தண்டவாளம், மலையருவி என இரயில் போகும் பாதைகளையும் அழகாக, பிரம்மாண்டமாக எடுத்துக் காட்டி, இந்த இடங்கள் எல்லாம் எங்கே இருக்கின்றன என நம்மை யோசிக்க வைக்கின்றார்.

வரிசையாக வெற்றியோட்டம் கண்ட இந்தி மசாலா படங்களை எடுத்து தனக்கென ஒரு முத்திரையை இந்தியப் படவுலகில் பதித்துக் கொண்டவர் இந்தப் படத்தின் இயக்குநர் ரோஹிட் ஷெட்டி. சூர்யாவின் “சிங்கம்” இந்திப் பதிப்பை  அஜய் தேவகனை வைத்து எடுத்து, 100 கோடி ரூபாய் வசூல் சாதனையைக் கண்டவர். ரோஹிட் ஷெட்டியின் தந்தை அந்தக் காலத்தில் பிரபலமான இந்திப் பட வில்லனும், சண்டைக் காட்சி அமைப்பாளருமான ஷெட்டி என்பவர். இவர் மொட்டைத் தலையுடம் எம்.ஜி.ஆருடன் ஊருக்கு உழைப்பவன் படத்திலும், மேலும் ஓரிரண்டு படங்களிலும் நடித்திருக்கின்றார்.

ஷாருக்கானின் அற்புத நடிப்பு

Chennai-Express---2தமிழ் நடிகர்கள் எல்லாம் இந்தப் படத்தைப் பார்த்து இன்றைக்கு இந்தியாவிலேயே முதல் நிலை நடிகராக இருக்கும் ஷாருக்கான் எப்படி கதையோடு இணைந்து இயல்பாக நடிக்கின்றார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஷாருக்கானை மாலை போட்டு, தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஓபனிங் பாட்டு இல்லை. எந்த இடத்திலும் தான் ஒரு பெரிய ஹீரோ என்பதைக் காட்டிக் கொள்ளாமல், சாதாரண வில்லன்களுக்குக் கூட அஞ்சி பவ்யமாக பதுங்கி ஒதுங்கும் பவ்யமும், முழுக்க முழுக்க கதைக்குத் தேவையான தனது இயல்பான நகைச்சுவை கலந்த நடிப்பையும் வழங்கி நம்மை படம் முழுக்க மகிழ்விக்கின்றார் ஷாருக்.

ஆங்காங்கே, தமிழ் வசனங்களை அவருக்கே உரித்தான பாணியில் வழங்கி திரையரங்கையே சிரிப்பொலியில் கலகலப்பாக்குகின்றார். சில காட்சிகளில் நீளமான தமிழ்ப் பெயர்களை உச்சரிக்க முடியாமல் அவர் மென்று விழுங்கும் காட்சிகள் திரையரங்கை சிரிப்பில் ஆழ்த்துகின்றன.

படத்தின் இறுதிக் காட்சியில் தமிழும் இந்தியும் கலந்து அவர் சத்யராஜைப் பார்த்து குடும்பம், இந்தியா, மொழி, பெண்களின் சுதந்திரம், காதல், அன்பு என பல்வேறு அம்சங்களைப் பற்றி பேசும் காட்சியில் அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கின்றார். அந்த கொஞ்ச நேர வசனம் அவ்வளவு கூர்மையாக, ஒவ்வொருவரும் சிந்திக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

ஷாருக்கானுடன் படம் முழுவதும் வரும் தீபிகாவுக்கு வழக்கமான கவர்ச்சிக் காட்சிகள் இல்லை என்றாலும், தனது நளினத்தாலும், அழகாலும், பாடல்களின் நடன அசைவுகளினாலும் நம்மை மெய்மறக்கச் செய்கின்றார். தமிழ் நாட்டுப் புடவைகளில் அம்சமாக வந்து கவர்கின்றார்.

ரஜினிக்கு மரியாதை

நமது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மரியாதை வழங்கும் பொருட்டு இறுதிக் காட்சியில் ஷாருக்கான், தீபிகா குழுவினர் வழங்கும் தலைவா என்று தொடங்கும் லுங்கி டான்ஸ் பாட்டு திரையரங்கில் ரஜினி ரசிகர்களை எழுந்து நின்று ஆட வைக்கும் என்பது நிச்சயம்.

மற்றபடி படத்தின் வண்ணமயமான படப்பிடிப்பு, துள்ள வைக்கும் பாடல்கள், தென்னிந்திய கிராமங்களின் அழகு, சிறப்பான நடிப்பை வழங்கும் துணை நடிகர்கள், கார்கள் பறக்கும் சண்டைக் காட்சி என படத்தின் அனைத்து அம்சங்களும் அருமை.

கொஞ்சம் கூட அலுப்பு தட்டாத திரைக்கதை. தமிழ் நடிகர்கள் தமிழிலேயே பேசிக் கொள்கின்றார்கள்.

ஆக, நாம் பார்த்து மகிழ வேண்டிய, நம்மால் மறக்க முடியாத இந்திப் படங்களில் ஒன்றாக சென்னை எக்ஸ்பிரஸ்’ திகழும் என்பது மட்டும் திண்ணம்.

-இரா.முத்தரசன்.