Home அரசியல் தேசியத் தலைவர் தேர்தல்: பினாங்கு மாநிலத்தில் ம.இ.கா.வினரின் 72 சதவீத ஆதரவு பழனிவேலுவுக்கே கிடைக்கும்! ...

தேசியத் தலைவர் தேர்தல்: பினாங்கு மாநிலத்தில் ம.இ.கா.வினரின் 72 சதவீத ஆதரவு பழனிவேலுவுக்கே கிடைக்கும்! – டத்தோ ஹென்ரி கணிப்பு

574
0
SHARE
Ad

henryஏப்ரல் 10 – எதிர்வரும் செப்டம்பர் 22ஆம் தேதி நடைபெறவிருக்கும் ம.இ.காவின் தேசியத் தலைவருக்கான தேர்தலில் நடப்பு தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கு பினாங்கு மாநில ம.இ.காவின் 72 சதவீத கிளைகள் ஆதரவு வழங்கும் என தான் எதிர்பார்ப்பதாக, ம.இ.கா. பாகான் தொகுதியின் தலைவரும், பினாங்கு மாநில ம.இ.கா பொருளாளருமான டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பழனிவேல், பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ம.இ.கா தேசியத் தலைவர் பதவியை அலங்கரிப்பது இதுவே முதன் முறை என்பதாலும், பினாங்கு மாநிலம் முழுக்க பரவலாக ம.இ.கா கிளைத் தலைவர்களிடையே பழனிவேலுவுக்கு ஆதரவு பெருகி வருவதைத் தான் கண்கூடாகக் கண்டு வருவதாகவும் டத்தோ ஹென்ரி மேலும் கூறியுள்ளார்.

டாக்டர் சுப்ரமணியம் போட்டியிடவில்லை என அறிவிக்க வேண்டும்

subra (1)“மேலும் ஒரு தவணை மட்டுமே பதவியில் நீடிப்பதாக பழனிவேல் கூறியிருப்பதால், மற்ற மாநிலங்களிலும் ம.இ.காவினரிடையே பழனிவேலுவுக்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகின்றது.

“எனவே, டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டு, மாநில வாரியாக சென்று கிளைத் தலைவர்களைச் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், அதனால் கட்சியில் குழப்பமும், பிளவுகளும்தான் ஏற்படுகின்றது என்றும் ஹென்ரி இன்று பத்திரிக்கைகளுக்கு வெளியிட்ட அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தனது அறிக்கையில் டத்தோ ஹென்ரி மேலும் பின்வருமாறு தெரிவித்திருக்கின்றார்:-

“பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருக்கும் ம.இ.காவுக்கு, தற்போது வழங்கப்பட்டிருக்கும் அரசாங்கப் பதவிகளின் மூலம் மக்களுக்கு சேவையாற்றவும், இந்தியர்களை மீண்டும் ம.இ.காவுக்கும், தேசிய முன்னணிக்கு ஆதரவாகவும் திசை திருப்பவும் அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

இந்த கால கட்டத்தில் ஜனநாயக முறைப்படி கட்சித் தேர்தல்களை எதிர்நோக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ம.இ.கா இருக்கின்றது. ஆனால், கட்சித் தேர்தல்களால் நாம் மீண்டும் தலைமைத்துவ போராட்டத்தில் சிக்கி, பிளவுபட்டுவிடக் கூடாது.

டாக்டர் சுப்ரமணியம் நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்!

டாக்டர் சுப்ரமணியம் சுகாதார அமைச்சர் என்ற முக்கியமான பொறுப்புக்கு இந்த முறை பிரதமரால் நியமிக்கப்பட்டிருக்கின்றார். அவருடைய கடந்த கால தொழிலுக்கும், அவர் கற்ற கல்விக்கும் பொருத்தமான அமைச்சு என்ற முறையில் அவரால் இந்த அமைச்சின் மூலம் கட்சிக்கும், இந்திய சமுதாயத்திற்கும் நிறைந்த சேவைகளை வழங்க முடியும். அதனை அவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதோடு, மீண்டும் கட்சியின் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே நான் அறிந்த வரையில் பெரும்பாலான ம.இ.கா. கிளைத் தலைவர்களின் விருப்பமாக இருக்கின்றது.

எனவே, இனியும் தாமதிக்காது, டாக்டர் சுப்ரமணியம் உடனடியாக தேசியத் தலைவர் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவிப்பதோடு, தேசியத் துணைத் தலைவருக்கு தான் மீண்டும் போட்டியிடுவதாகவும்  அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு டாக்டர் சுப்ரமணியம் அறிவித்து விட்டால், இதன் மூலம் கட்சியில் தொடர்ந்து நிலவி வரும் குழப்பங்களும், தேவையற்ற விவாதங்களும் ஒரு முடிவுக்கு வரும். அதோடு, பத்திரிக்கைகளில் கட்சியின் பல்வேறு தலைவர்கள் தேசியத் தலைவர் தேர்தல் தொடர்பாக தொடர்ந்து விடுத்து வரும் தேவையற்ற அறிக்கைப் போர்களும் ஒரு முடிவுக்கு வந்து அதனால் கட்சியில் ஒரு சுமுகமான, இணக்கமான சூழ்நிலை உருவாகும்.

எனவே, டாக்டர் சுப்ரமணியம் உடனடியாக தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்து கட்சியில் மேலும் குழப்பங்களும், பிளவுகளும் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்”

-இவ்வாறு டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் தனது பத்திரிக்கை அறிக்கையில் கூறியுள்ளார்.