கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – சமூக வலைத்தளங்களில் உலவும் சர்ச்சைக்குரிய காணொளிகளைக் கண்டு உணர்ச்சிவசப்படுவதை விட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மக்கள் அனைவரையும் துணைத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் ஜைலானி ஜோஹாரி கூறியுள்ளார்.
“இது போன்ற பிரச்சனைக்குரிய காணொளிகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டால், அதை உடனே அடுத்தவர்களுக்கு பரப்பி விடக்கூடாது” என்று இன்று நடைபெற்ற உலக ஊடக புகைப்படங்கள் கண்காட்சியில் கலந்து கொண்ட ஜைலானி தெரிவித்தார்.
மேலும், இது போன்ற சர்ச்சைக்குரிய காணொளிகளை மக்கள் பார்க்கும் சந்தர்ப்பம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ஜைலானி, “அந்த காணொளி சர்ச்சைக்குரியது என்று மக்கள் உணர்ந்தால், உடனடியாக அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
சமீபகாலமாக, இஸ்லாம் மத உணர்வுகளைத் தூண்டிவிடும் படியான காணொளிகள் வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு சர்ச்சைகளைக் கிளப்புகின்றன.
கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி, ஜோகூர் மாநிலம் கோத்தா திங்கியில் உள்ள ஒரு இஸ்லாமியர் தொழுகை நடத்தும் அறையில், சிங்கப்பூரைச் சேர்ந்த பௌத்தர்கள் குழு ஒன்று தியானம் செய்வது போல் உள்ள காணொளி யூடியூப் (Youtube) வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு கடும் சர்ச்சை வெடித்தது.
அதற்கு முன்பு, நாய் பயிற்றுநர் ஒருவர் தனது நாய்களை வைத்து ரம்லான் வாழ்த்து சொல்வது போலான காணொளி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.