புத்ராஜெயா – மலேசியாவில் நட்பு ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்களைக் கண்டறிந்து விசாரணை செய்யும் வகையில், கூகுள் மற்றும் பேஸ்புக்குடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக துணையமைச்சர் ஜைலானி ஜோஹாரி தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பற்றியும், தலைவர்கள் பற்றியும் நட்பு ஊடகங்களில் இழிவாகக் கருத்துரைப்பவர்களைக் கண்டறிய அரசாங்கம் எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என நாடாளுமன்றத்தில் இன்று சிபிதாங் நாடாளுமன்ற உறுப்பினர் சபாவி அகமட் வசாலி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த ஜைலானி, இணையத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களைக் கண்டறிய அமைச்சர் சாலே சையத் கெருவாக் தலைமையில் அரசாங்கம் புதிய குழுவை நியமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த மாதம் மட்டும் 399 இணையதளங்கள் அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளதோடு, 22 இணையவாசிகள் விசாரணை செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவலையும் ஜைலானி தெரிவித்துள்ளார்.