ஆக. 14- தமிழ் சினிமாவில் ‘சேது’ துவங்கி ‘பரதேசி’ வரை ஆறுபடங்களை இயக்கியுள்ள பாலா, ‘நான் கடவுள்’ படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும், மற்ற படங்களுக்காக நான்கு தேசிய விருதுகளையும், ஆறு சர்வதேச தமிழ்த் திரைப்பட விருதுகளையும், பல மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
பி.எச். டேனியல் எழுதிய ‘ரெட் டீ’ என்ற ஆங்கில நாவலை மொழிபெயர்த்து தமிழில் வெளிவந்த ‘எரியும் பனிக்காடு’ என்ற நாவலை அடிப்படையாக கொண்டு ‘பரதேசி’ படத்தை பாலா உருவாக்கினார்.
கடந்த மார்ச் மாதம் உலகெங்கிலும் வெளியான பரதேசியின் சிறப்பைப் பார்த்து பிரமித்த இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் வடஇந்தியா முழுவதுமாக ‘பரதேசி’யை வெளியிட்டார்.
இந்நிலையில் ‘பரதேசி’ படம் வருகிற அக்டோபர் மாதம் லண்டனில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் அதிகபட்சமாக எட்டு விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடும் இதே வேளையில் இதுவரையிலான தமிழ் சினிமாவின் வரலாற்றில் எட்டு சர்வதேச விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட ஒரே படம் ‘பரதேசி’ என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த வெளிநாட்டு இயக்குனர் ஆகிய நான்கு விருதுகளுக்காக இயக்குனர் பாலாவும், சிறந்த நடிகருக்காக அத்ர்வா, ஒளிப்பதிவாளருக்காக செழியன், இசையமைப்பாளருக்காக ஜீ.வி.பிரகாஷ் குமார், உடை வடிவமைப்புக்காக பூர்ணிமா ராமசாமி என மொத்தம் எட்டு விருதுகளுக்காக பரதேசி படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்பட விழாவில் அமெரிக்கா, ரஷ்யா, லெபனான், தென்கொரியா, சிலி, ஐரோப்பிய நாடுகளின் உலகப்படங்கள் போட்டியில் கலந்து கொண்டாலும் அதிகபட்சமான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒரே படம் ‘பரதேசி’தான்.
முதன்முறையாக சர்வதேச தொழில்நுட்ப கலைஞர்களுக்கு இணையாக தமிழ் திரைப்படக் கலைஞர்கள் உலக அளவில் போட்டியில் கலந்து கொள்ளும் இத்திரைப்பட விருதுகள் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளன.