சென்னை, ஆக. 16– இந்தியா சுதந்திரம் அடைவதற்காக, சுதந்திர வேள்வித் தீயில் ரத்தம் சொறிந்து உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் நினைவாக சென்னை, ராஜாஜி சாலையில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவுச் சின்னத்தில், முதன் முறையாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா சுதந்திரத் திருநாளன்று அந்த வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா, போர் நினைவுச் சின்னத்திற்கு வந்த போது ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களின் தலைமைப் படைத் தலைவர் லெப்டினெட் ஜெனரல் வி.கே.பிள்ளை, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்று மற்ற படை தளபதிகளான தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கடற்படை பொறுப்பு அதிகாரி கமோடர் அமர் கே.மகாதேவன், தாம்பரம், விமானப்படைத் தளத்தின், விமானப்படை அதிகாரி ஏர் கமோடர் எஸ்.பிரபாகரன், கிழக்கு மண்டல கடலோரக் காவல் படை கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.பி.ஷர்மா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களின் முதன்மை அலுவலர் மேஜர் ஜெனரல் ஆர்.ஜி.கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.
பின்னர், மரபு முறைப்படி இந்திய ராணுவ வீரர்கள் மலர் வளையத்தினை தாங்கி இரு புறமும் நடந்து வர, முதல்–அமைச்சர் ஜெயலலிதா நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து, நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி, இரண்டு நிமிடம் மெளனம் அனுசரித்தார். அப்போது பாரம்பரிய ராணுவ இசை ராணுவ வீரர்களால் இசைக்கப்பட்டது.
அதன் பின்னர், முதல்–அமைச்சர் ஜெயலலிதா பார்வையாளர்கள் பதிவேட்டில் தனது கருத்தினைப் பதிவு செய்தார்.
முதன்முறையாக சுதந்திரத் திருநாள் விழாவை முன்னிட்டு சென்னை, ராஜாஜி சாலையில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில் நம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி உயிர் நீத்த வீரர்களை நினைவு கூறும் வகையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்களின் தலைமைப் படை தலைவர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.