சென்னை,பிப்.7- பட்டினப்பாக்கத்தில் உள்ள நடிகை குஷ்பு வீடு மீது வியாழக்கிழமை கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள நடிகை குஷ்பு வீட்டின் மீது 15 பேர் கொண்ட கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது.
அவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் குறித்து காவல் நிலையத்தில் எந்தவித புகாரும் அளிக்கப்படவில்லை. கல் வீச்சில் வீட்டில் இருந்த கண்ணாடி பொருள்கள் சேதமடைந்தன என்று போலீஸôர் தெரிவித்தனர்.
திமுகவின் அடுத்த தலைவர் குறித்து ஒரு வார இதழுக்கு குஷ்பு பேட்டியளித்திருந்தார். இந்தப் பேட்டியில் குஷ்பு தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
திருச்சியில் செருப்பு வீச்சு: திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி என். சிவா இல்லத் திருமண விழாவில் பங்கேற்று விட்டு, தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து நடிகை குஷ்பு வெளியே வந்துள்ளார்.
அப்போது அங்கு திரண்டிருந்த திமுக மகளிரணியினர் சிலர் அவருக்கு எதிராக கோஷமிட்டதுடன், குஷ்பு மீதும், அவரது உதவியாளர் மீதும் செருப்பை வீசினராம். உடனடியாக போலீஸôர் அங்கு வந்து அவர்களை மீட்டனர்.
இதைத்தொடர்ந்து, திருச்சியில் மற்றொரு ஹோட்டலில் தங்கியிருந்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து விளக்கமளிக்கச் சென்றாராம் குஷ்பு. ஆனால், அவரைச் சந்திக்க ஸ்டாலின் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, திருச்சி விமான நிலையத்துக்கு குஷ்பு சென்ற போது, அங்கிருந்த திமுகவினர் சிலர் அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் குஷ்பு பேசியது: நான் சொன்ன கருத்தை தவறாகப் புரிந்து கொண்டுவிட்டனர் என்றார்.