சென்னை,பிப்.7- கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் தமிழகம் முழுவதும் 500-க்கும் அதிகமான திரையரங்குகளில் இன்று வெளியானது.
நடிகர் கமல்ஹாசன் ரூ.95 கோடியில் தயாரித்த மெகா பட்ஜெட் படமான விஸ்வரூபம் ஜனவர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், திரைப்படத்தில் முஸ்லிம் மதத்தினரை புண்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி இந்தப் படத்தை திரையிடக் கூடாது என சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
தமிழக அரசின் தடையைத் தொடர்ந்து படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் விஸ்வரூப படப் பிரச்னை பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. இதையடுத்து தமிழக உள்துறைச் செயலாளர் முன்னிலையில் நடிகர் கமல்ஹாசன், முஸ்லிம் அமைப்பினர் பேச்சு நடத்தினர். சில காட்சிகள் மற்றும் ஒலிக் குறிப்புக் காட்சிகளை நீக்க கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து வியாழக்கிழமை தமிழகம், புதுச்சேரியில் 500-க்கும் அதிகமான திரையரங்குகளில் விஸ்வரூபம் வெளியானது.
சென்னையில் சுமார் 40 திரையரங்குகளில் விஸ்வரூபம் திரையிடப்பட்டது. ரசிகர்களுக்காக சிறப்பு காட்சிகள் புதன்கிழமை இரவு காண்பிக்கப்பட்டது.
விஸ்வரூபம் பட ரிலீûஸ கமல் ரசிகர்கள் விழாக் கோலமாக கொண்டாடினர். திரையரங்க வாசலில் கமல்ஹாசனின் பல அடி உயர கட் அவுட்களை வைத்து இருந்தனர். கொடி, தோரணங்களும் கட்டி இருந்தனர். பட்டாசுகள் வெடித்து, மேள தாளம் முழங்கி தங்கள் மகிழ்ச்சியை ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.