சென்னை, ஆக. 30 தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து 68.80 என வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்கா தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் டாலரின் மதிப்பை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகவும், அதன் விளைவாகத்தான் இந்தியா, இந்தோனேசியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, துருக்கி போன்ற நாடுகளின் நாணயங்களின் மதிப்பு வேகமாக சரிந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஜவஹர்லால் நேரு 17 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அப்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4.76 ஆகும். இந்திராகாந்தி 15 ஆண்டுகள் பிரதமராக இருந்தபோது, ரூபாய் மதிப்பு 11.36 ஆகும். ராஜீவ்காந்தி காலத்தில் ரூபாய் மதிப்பு 16.22 ஆகும். பி.வி.நரசிம்மராவ் காலத்தில் 35.43 ஆகும். வாஜ்பாய் காலத்தில் ரூபாய் மதிப்பு 45.31 ஆகும். மன்மோகன் சிங்கின் 9 ஆண்டு கால ஆட்சியில் 68.80 ஆகும். இது வரலாறு காணாத வகையில் மிகப் பெரிய வீழ்ச்சியாகும்.
தொய்வடைந் திருக்கும் இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தி வலுவூட்டாவிட்டால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 75 ஆகச் சரியும் நிலைமை உள்ளது என்று வல்லுநர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். மொத்தத்தில், நடப்பாண்டு, ஜனவரி முதல், இதுவரை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 19.50 சதவிகிதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தில் இதுவரை கண்டும் கேட்டுமிராத காரிருளாகும்.
அமெரிக்க டாலரின் நிலைமை இவ்வாறிருக்க, இங்கிலாந்து பணமான “பவுண்டு”க்கு நிகராகவும் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. ஒரு “பவுண்டு”க்கு நிகரான ரூபாயின் மதிப்பு 106 ஆகக் குறைந்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றிய பணமான “யூரோ” வுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 92 ஆகவும், சுவிஸ் “பிராங்க்” மதிப்பில் ரூ.75 ஆகவும், கனடா டாலர் மதிப்பில் ரூ. 65 ஆகவும், ஆஸ்திரேலிய டாலர் மதிப்பில் ரூ. 60 எனவும், நியூசிலாந்து டாலர் மற்றும் சிங்கப்பூர் டாலர் மதிப்பில் ரூ.50க்கும் சரிந்துள்ளது. குவைத் “தினார்” மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.240க்கு அதிகம் என்ற நிலையை எட்டியுள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் சங்கிலித் தொடர் போன்ற விளைவுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. கடந்த சில நாட்களாக பங்கு சந்தையிலும் சரிவு ஏற்பட்டு வருகிறது. முதலீட்டாளர்களின் பங்குகளின் மதிப்பு 170 லட்சம் கோடி குறைந்துள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறப்பட்டாலும், எதுவும் உடனடியாகப் பயனளிப்பதாகத் தெரியவில்லை.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும், இறக்குமதி நிறுவனங்களும் டாலரை அதிக அளவில் கொடுத்தே கொள்முதல் செய்கின்றன. எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவில் அமெரிக்க டாலர்களை வாங்குவதால், அன்னிய நாடுகளில் வெளிச்சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. சிரியா நாட்டில் நடைபெற்று வரும் கலவரத்தால் 27-8-2013 அன்று லண்டன் வர்த்தக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 0.4 சதவிகிதம் உயர்ந்தது. விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் நிறைவான பொருளாதார அறிவு படைத்தவர்தான். அவர்தான் இருபதாண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குக் காரணகர்த்தாவாக இருந்தவர். பழைய பொருளாதார உத்திகள் பலனளிக்காது என்றால், புதிய முறைகளைக் கையாண்டு வெகுவிரைவில் தீர்வு காண வேண்டும்.
மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும், நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவிகிதமாகக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சொல்லியிருக்கிறார். மேலும் நடப்பு கணக்குப் பற்றாக்குறையை 7 ஆயிரம் கோடி டாலருக்குள் அடக்க வேண்டுமென்று நம்முடைய நிதியமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
நாம் அதிக அளவுக்கு ஏற்றுமதி செய்தால் நடப்புக் கணக்கில் உபரி ஏற்படும். நாம் அதிக அளவுக்கு இறக்குமதி செய்தால் நடப்புக் கணக்கில் பற்றாக்குறை ஏற்படும். இந்தப் பற்றாக்குறை அதிகமாக ஏற்படும்போது, பொருளாதார நெருக்கடியை உண்டாக்கும். நடப்புக் கணக்கு பற்றாக்குறை என்பதுதான்; தற்போது 8900 கோடி டாலர் பற்றாக்குறையாக அதிகரித்துள்ளது. இந்த அளவிற்கு நடப்புக் கணக்கு பற்றாக் குறை அதிகமாகக் காரணம், கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றை அதிகமாக இறக்குமதி செய்வதுதான் என்று அரசு தெரிவிக்கும் காரணம் மட்டுமே உண்மையானதல்ல.
நாம் இறக்குமதியைப் பற்றிப் பேசும்போது, இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருள்களைப் பற்றியும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு தயாரிப்பாளர் ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்காக மூலப் பொருளை இறக்குமதி செய்வதுதான் மூலதனப் பொருள் இறக்குமதி. அப்படி மூலப் பொருளை இறக்குமதி செய்து, புதிய பொருள்களைத் தயாரித்து அதிக விலைக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இறக்குமதியால் ஏற்படும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை ஈடுகட்ட முடியும்.
2004-2005இல் மூலப் பொருள்களின் இறக்கு மதி 2550 கோடி டாலர் அளவுக்கு இருந்தது. தற்போது 58700 கோடி டாலருக்கு மூலப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால்தான் டாலர் மதிப்பு மிகவும் உயர்ந்து, அதற்கு நிகரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு வரலாறுகாணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரை ரூபாய் மதிப்பு 18 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக இந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதத்திற்கும் கீழே செல்லும் என்று கூறப்படுகிறது.
நமது இயற்கை வளங்கள் எல்லை யற்றவை. நமது மனித வளம் ஈடு இணையற்றது. இந்தியா விடுதலை அடைந்ததற்குப் பின்னர் எத்தனையோ சவால்களைச் சந்தித்து முன்னேறி வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பொருளாதாரச் சோதனையிலும் இந்தியா நிச்சயம் வெற்றிபெறும் என எதிர்பார்ப்போம். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.