Home நாடு செப்டம்பர் 8இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழாக் கொண்டாட்டங்கள்

செப்டம்பர் 8இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழாக் கொண்டாட்டங்கள்

613
0
SHARE
Ad

malaysia--1செப்டம்பர் 2– மலேசியத் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாகத் திகழும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தனது பொன்விழா கொண்டாட்டங்களின் முதல் அங்கத்தை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 8ஆம் தேதி பிற்பகல் 2.00 மணி முதல், தலைநகர், ஜாலான் துன் ரசாக்கிலுள்ள, தேசிய நூலகத்தில் விமரிசையாக நடத்தவிருக்கின்றது.

இந்நிகழ்வில், சங்கம் நடத்திய இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். நிகழ்வுக்கு சிறப்பு வருகையாளராக வருகை தரவிருக்கும் கல்வி துணையமைச்சர் பி.கமலநாதன் பரிசுகளை எடுத்து வழங்குவார்.

அத்துடன், கடந்த செம்மொழி மாநாட்டில் மலேசியாவின் சார்பாக படைக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பும், சிறுவர்/இளையோர் சிறுகதைகள் என  இரண்டு நூல்களும் வெளியிடப்படும்.

#TamilSchoolmychoice

செம்மொழி கட்டுரைத் தொகுப்பை துணையமைச்சர் கமலநாதன் வெளியிட, கிம்மா கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் சைட் இப்ராகிம் பெற்றுக் கொள்வார். சிறுவர்/இளையோர் சிறுகதைத் தொகுப்பின் முதல் பிரதியை தமிழகத்திலிருந்து வருகை தரவிருக்கும் அபிராமி இராமநாதன் பெற்றுக் கொள்வார்.

இதே நிகழ்வில் தமிழகப் பிரமுகர் அபிராமி இராமநாதனுக்கு சிவாஜி கணேசன் கலைமன்றம் கௌரவிப்பு செய்யவிருக்கின்றது.

இந்த பொன்விழா கொண்டாட்டத்தில் கவியரங்கம் ஒன்றும் இடம் பெறுகின்றது. நாட்டின் முன்னணி கவிஞர்கள் இந்த கவியரங்கத்தில் பங்கு பெறுகின்றார்கள்.

இந்நிகழ்வின் முத்தாய்ப்பாக திகழப் போவது நமது நாட்டின் முன்னணி இலக்கியவாதியான இறையருட் செல்வர் சீனி நைனா முகம்மதுவின் இலக்கியப் பேருரையாகும்.

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொன்விழா கொண்டாட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

பொன்விழாக் கொண்டாட்டத்தின் இரண்டாவது அங்கம் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் 50 எழுத்தாளர்களுக்கு பணமுடிப்பு வழங்கப்படுவதோடு, சங்கத்தின் வரலாறும், சிறப்பு மலரும்  வெளியிடப்படும்.

மேல்விவரங்களுக்கு சங்கத்தின் செயலாளர் ஆ.குணநாதனை 012-2668416 என்ற கைத்தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.