புத்ர ஜெயா, செப் 4 – வரும் 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகும் தான் தேசியத் தலைவர் பதவியைத் தொடரலாம் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அறிவித்திருப்பது குறித்து கருத்து கூற ம.இ.கா துணைத்தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மறுத்துவிட்டார்.
இன்று மலேசிய சமுதாயத்தின் ஆரோக்கியம் குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியைத் தொடங்கி வைத்த சுப்ராவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, தான் அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை என்றும், பத்திரிக்கைகளின் விவாதங்களுக்கு தான் ஆளாக விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும்,சமுதாயம், கட்சி மற்றும் நாடு இவைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை அடிப்படையாக வைத்து தான் கட்சியில் நீடித்து இருக்கப் போவதாக சுப்ரா குறிப்பிட்டார்.
எனினும், தானும், பழனிவேலும் நல்ல நண்பர்கள் என்றும், கட்சியின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து கலந்துரையாடுவோம் என்றும் சுப்ரா தெரிவித்தார்.
“நமது சக்தியை அரசியலில் சிதறவிட்டோம் என்றால், நம்மால் நாட்டின் வளர்ச்சியிலும், சமூகத்தின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்த முடியாது” என்று சுப்ரா கூறினார்.
கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி, ம.இ.கா தேசியத் தலைவர் பதவிக்கு பழனிவேல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கிளைத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் தான் 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகும் பதவியில் நீடிக்க வாய்ப்பு உள்ளது என்ற திடீர் அறிவிப்பை பழனிவேல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.