கோலாலம்பூர், செப்டம்பர் 7 – மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஏசியா ஆகிய இரண்டு விமான சேவை நிறுவனங்களுக்கும் போட்டி சட்டம் 2010 ஐ மீறிய குற்றத்திற்காக தலா 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மலேசிய போட்டி ஆணையம் (The Malaysian Competition Commission) நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்த இரண்டு நிறுவனங்களும் “சந்தைப் பகிர்வு” செய்து கொண்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சந்தைப் பகிர்வு என்பது ஒரு மிகப் பெரிய சட்ட விதிமுறை மீறல், சந்தையில் தங்களது சேவையையோ அல்லது பொருளையோ பாதுகாக்கும் நோக்கில், போட்டியைத் தடுப்பதற்காக செய்யப்படுவதாகும்.
“தொழிலில் சந்தைப் பகிர்வு” செய்யப்பட்டால், வாடிக்கையாளர்களின் கட்டணங்களில் போட்டியிடுவது நிறுத்தப்படும்” என்று மலேசிய போட்டி ஆணையத்தின் தலைவர் சிடி நோர்மா யாகோப் கூறியுள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி மலேசியா ஏர்லைன்ஸும், ஏர் ஏசியாவும் இந்த ஒப்பந்தத்தை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.