கோலாலம்பூர், செப் 11 – சிறையில் இருக்கும் ஹிண்ட்ராப் நிறுவனர் பி.உதயகுமாரை, ஜசெக பொதுச் செயலாளரும், பினாங்கு மாநில முதலமைச்சருமான லிம் குவான் எங் சந்திப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்.
இருப்பினும், இது அரசியல் நோக்கமல்ல என்றும், மனிதாபிமான அடிப்படையில் தான் சந்திக்க விரும்புவதாகவும் லிம் தெரிவித்துள்ளார்.
தான் உதயகுமாரை சந்திக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்ததை சிறை நிர்வாக இயக்குநர் சுல்கிப்ளி ஓமார் நிராகரித்துவிட்டதால், தற்போது உள்துறை அமைச்சருக்கு அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருப்பதாகவும் லிம் தெரிவித்தார்.
அந்த விண்ணப்பங்களின் நகல்களை செய்தியாளர்களிடம் காட்டிய லிம், இதற்கு முன் உதயகுமாரோடு தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், ஹிண்ட்ராப்போடு ஜசெக விற்கு எந்த உடன்படிக்கையும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
கடந்த ஜூன் மாதம் உதயகுமார் மீதான தேச நிந்தனைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இரண்டு வருடம் 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டு, தற்போது காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.