Home நாடு இன்று 16 செப்டம்பர் 50ஆவது மலேசிய தினம்! – கே.எஸ். செண்பகவள்ளி

இன்று 16 செப்டம்பர் 50ஆவது மலேசிய தினம்! – கே.எஸ். செண்பகவள்ளி

2032
0
SHARE
Ad

1291700_694254370603621_1187936452_o

செப்டம்பர் 16 –

 மலேசியாவை உருவாக்கிய கோபோல்ட் ஆணையம்!

#TamilSchoolmychoice

 கோபோல்ட் ஆணையம்! 1957-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி நமக்கு சுதந்திரம் கிடைத்த சில வருடங்களிலேயே ‘மலாயா’ என்ற இயற்பெயரிலிருந்து ‘மலேசியா’ என்ற பெயருக்கு மாற்றம் காண இந்த அமைப்பு ஓர் உன்னதப் பணியை ஆற்றியுள்ளது என்பது மலேசிய வரலாற்றில் பதிக்கப்பட்டுள்ளது. தீபகற்ப மலேசியா, சபா, சரவாக் ஆகிய நாடுகள் ஒன்றாக இணைய, ஒரே குடையின் கீழ் ஆட்சிக்கு உட்படுத்த உருவாக்கப்பட்டதுதான் கோபோல்ட் ஆணையம். இந்த ஆணையம் 1962ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதியன்று தேசிய உடன்படிக்கை செயற்குழுவால் (Jawatankuasa Perundingan Perpaduan Malaysia) அமைக்கப்பட்டது.

1961-ஆம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி, துங்கு அப்துல் ரஹ்மான் சிங்கப்பூரிலுள்ள “அடெல்பி” தங்கும் விடுதியில் தென்கிழக்காசியப் பத்திரிக்கையாளர் மாநாட்டில், உரையாற்றியபோது மலேசிய அமைப்பைப் பற்றி விவரித்தார். அரசியல், பொருளாதார மேம்பாட்டின் அடிப்படையில் இந்நாடுகள் வளர்ச்சியடைய ஒரே நாடாக இருந்து செயல்பட்டால் மிகவும் வலுவடையும் என்றும் போர்னியோ உத்தாரா (சபா), சரவாக், புருணை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில், கம்னியூஸ்ட் ஆதிக்கம் பரவலாகத் தோன்றி பல பிரச்சனைகளை ஏற்படுத்திய வண்ணம் இருந்ததால் இத்தகையச் சவால்களை எதிர்ப்பதற்கு இந்நான்கு நாடுகளும் மலாயாவுடன் ஒன்றிணைந்தால் சுலபமாகப் பிரச்சனைகளை களையலாம் என்ற அடிப்படை நோக்கத்தில் இக்கருத்தினை முன் வைத்தார் துங்கு அப்துல் ரஹ்மான்.

இதன் தொடர்பாக பலவிதமான சர்ச்சைகள் எழுந்தாலும் பல கருத்து பரிமாற்றங்களுக்குப் பிறகு இறுதியில் சிங்கப்பூர், போர்னியோ உத்தாரா (சபா), சரவாக், புருணை ஆகிய நாடுகள் ‘மலேசியா’ அமைப்பின் உருவாக்கத்திற்கு சம்மதம் தெரிவித்தன. இதன் அடிப்படையில் ‘சர் டொனால்ட் ஸ்டிபன்’ தலைமையில் உருவாக்கப்பட்டதுதான் தேசிய உடன்படிக்கை செயற்குழு. இதன் முக்கிய நோக்கம், போர்னியோ உத்தாரா (சபா), சரவாக் மக்களுக்கு மலேசிய அமைப்பைப் பற்றி தெளிவான விளக்கங்களைக் கூறி, ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இச்செயற்குழு அமைக்கப்பட்டது. மலாயா சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிங்கப்பூரிலிருந்து சட்டசபை உறுப்பினர்களும், ஓர் எதிர்க்கட்சி உறுப்பினரும், போர்னியோ உத்தாரா, சரவாக்கிலிருந்து மத்திய ஆட்சிக்குழு உறுப்பினர்களும் தேசிய உடன்படிக்கை செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதற்கிடையில், மலேசிய அமைப்பைப் பற்றி போர்னியோ உத்தாரா (சபா), சரவாக் மக்களின் எதிர்பார்ப்புகள், கருத்துகளை அறிந்து இவ்வமைப்பைப் பற்றிய நல்ல திடமான எண்ணங்களை அம்மக்கள் மத்தியில் உருவாக்குவதற்காகதான் “கோபோல்ட் ஆணையம்” நிறுவப்பட்டது. இதில் முன்னாள் இங்கிலாந்து வங்கியின் கவர்னரான “கோபோல்ட்” பிரபு, டத்தோ வோங் பாவ் நீ, இஞ்சே முகம்மட் கசாலி ஷாபி, சர் அந்தோணி அபேல், சர் டேவிட் வெதெர்ஸ்டன், எச்.ஹரிஸ் ஆகியோர் பொறுப்பேற்றிருந்தனர். மேலும், மலேசிய அமைப்பின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பொருட்டு, 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அரசாங்கங்களுக்கிடையிலான செயற்குழு (Jawatankuasa Antara Kerajaan) அமைக்கப்பட்டது. இதன் தலைவராக “லாண்ட்ஸ்ட்டௌனி” பிரபுவும்,(Lord Landsdowne) துணைத்தலைவராக துன் அப்துல் ரசாக்கும் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து, 20 முக்கிய அம்சங்கள் கொண்ட அறிக்கை ஒன்றைத் தயார் செய்து, “கோபோல்ட்” ஆணையத்திடம் சமர்ப்பித்து, போர்னியோ உத்தாரா, சரவாக் மக்களிடையே மலேசிய அமைப்புக்கான சட்டத்திட்டங்கள், ஒப்பந்தங்கள், ஆகியவைகளை தெளிவாக எடுத்துரைத்து, அந்நாட்டு மக்களின் ஆதரவைக் குறித்து ஆய்வு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இவ்வறிக்கையில், மலேசிய அமைப்பு மலாயாவின் சட்டதிட்டங்கள், ஆட்சிக்கு கீழாக செயல்படவும், வெளியுறவு, தற்காப்பு, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கூட்டரசு அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டால் ஒரு வலுவான அரசாங்கமாக விளங்கும் என்றும், இஸ்லாமிய மதம் தேசிய மதமாகவும் விளங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன. இவ்வுடன்படிக்கைக்கு புருணை ஒத்துக்கொள்ளாததால், அதிகாரப்பூர்வமாக மலேசிய அமைப்பிலிருந்து விலகிக்கொண்டது. “கோபோல்ட்” ஆணையத்தின் ஆய்வின்படி போர்னியோ உத்தாரா(சபா), சரவாக் ஆகிய நாடுகளிலிருந்து ஏறக்குறைய 80% மக்கள் இவ்வுடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.

1185794_694256063936785_901998176_n1962-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதி பிரிட்டிஷ், மலாயா அரசாங்கத்திற்கு “கோபோல்ட்” ஆணையத்தின் செயலறிக்கைகள் அனுப்பப்பட்டன. போர்னியோ உத்தாரா, சரவாக் மக்கள் ஏறக்குறைய எல்லா ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொண்டதால், நாடாளுமன்ற உறுப்பினர்களான துணைப்பிரதமர் துன் அப்துல் ரசாக், துன் வீ.தி.சம்பந்தன், துன் டான் சியூ சின், துன் இஸ்மாயில் ஆகியோருடன் கலந்து ஒரு ஆய்வினை மேற்கொண்டார் துங்கு அப்துல் ரஹ்மான். அதனைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் உயர் ஆணையர் ஹெரால்ட் மெக்மில்லனுடன் பேச்சு வார்த்தையும் நடத்தினர். அவ்வழியே, மலேசிய அமைப்பின் தேசிய உடன்படிக்கைக்கான பேச்சு வார்த்தைகள் இரு வாரங்களாக லண்டனில் தொடர்ந்தன. 1963 ஜூலை 9-ம் தேதி லண்டனில் முக்கிய ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டனர். இதில் பிரிட்டிஷ் பிரதிநிதிகளும், மலாயா, போர்னியோ உத்தாரா (சபா), சரவாக், சிங்கப்பூர் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டனர். மலேசியா அமைப்பு 1963 ஆகஸ்ட் 31-ம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஒரு சில முக்கிய அறிக்கைகள் காலதாமதமாக கிடைக்கப்பெற்றதால் செப்டம்பர் 16-ம் தேதிக்கு மாற்றம் கண்டது.

மலேசியாவின் அமைப்புக்கு கோபோல்ட் ஆணைய செயற்குழுவினர் ஆற்றிய பணிகள் அளப்பரியன. போர்னியோ உத்தாரா(சபா), சரவாக் மாநிலங்களின் பூர்வீகக் குடிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பல கலவரங்கள் மூண்டிருந்தாலும் துன் தெமங்கோங் ஜுகா, துன் ஃபுவாட் ஸ்டிபன், துன் டாத்து முஸ்தாபா ஆகியோரின் முழு ஒத்துழைப்புடன் பூர்வீகக் குடிகளின் மனநிலையை மாற்றி மலேசியா அமைப்புக்கு பெரும்பங்காற்றியது கோபோல்ட் ஆணையம்.

1963ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மெர்டேக்கா அரங்கத்தில் மாட்சிமை தங்கிய பேரரசர், மலாய் மன்னர்கள், சிங்கப்பூர், சபா, சரவாக் பிரதிநிதிகள் இன்னும் பல முக்கிய பிரமுகர்கள், சிறப்பு வருகையாளர்கள், சுமார் 30,000 பொதுமக்கள் மத்தியில் தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் ‘மலேசியா’வைப் பிரகடனப்படுத்தினார். வரலாற்று முத்திரைப் படைத்த இந்நாளை ஏழு முறை ‘மெர்டேக்கா’ என்று முழங்கி நிறைவும் செய்தார்.

‘மலேசியா’ அமைப்புக்கு கோபோல்ட் ஆணையம் முதுகெலும்பாய் இருந்து செயல்பட்டது என்பது வரலாறு கண்ட உண்மை!

– கே.எஸ். செண்பகவள்ளி